தோனி இந்திய அணி கேப்டனானதில் சச்சின், சேவாக், யுவராஜ்-க்கு ஈகோ-வா? ஹர்பஜன் சிங் சொன்ன அதிரடி பதில்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இளம் வயதில் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்ட போது, அவருக்கும் அணியில் இருந்த மூத்த வீரர்களுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவியதாகப் பல ஆண்டுகளாக வதந்திகள் பரவி வந்தன. இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது வெளிப்படையாக பேசி இருக்கிறார். யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சீனியர் வீரர்களுக்கும் தோனிக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடோ அல்லது மோதலோ துளியும் இருந்ததில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கங்குலியின் தலைமையை நினைவுகூர்ந்து பேசிய ஹர்பஜன், "முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் தலைமையின் கீழ் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான் மற்றும் நான் எனப் பலரும் கிரிக்கெட்டில் முத்திரை பதித்திருந்தோம். கங்குலி விட்டுச் சென்ற அதே கட்டமைப்பிலேயே தோனி அணியை முன்னெடுத்துச் சென்றார். சீனியர் வீரர்களிடம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவோ அல்லது தேவையின்றி ஆலோசனை கூறவோ அவர் ஒருபோதும் முயன்றதில்லை. எந்தெந்த சூழல்களில் எப்படி விளையாட வேண்டும் என்பது அனுபவம் வாய்ந்த எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதை அவர் முழுமையாக உணர்ந்திருந்தார்" என்றார்.

தோனியின் தலைமைப் பண்பு குறித்துப் பேசிய அவர், "அவ்வளவு இளம் வயதில் தோனி கேப்டனானதில் எங்களுக்கு எந்தவித ஈகோவோ அல்லது கசப்போ இருந்ததில்லை. கேப்டன் பதவி மட்டுமே ஒரு அணியை முழுமையாக மாற்றிவிட முடியாது என்பதை நாங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டோம். தோனி ஒரு வெற்றிகரமான கேப்டனாகத் திகழ வேண்டும் என்றால், களத்தில் நிற்கும் 11 வீரர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதில் சீனியர்கள் உறுதியாக இருந்தோம்" எனக் குறிப்பிட்டார்.
தோனியின் கூலான மனநிலையைப் பாராட்டிய ஹர்பஜன், "தோனி களத்திலும் சரி, வெளியிலும் சரி எப்போதுமே அமைதியாக இருப்பார். அவரது முகத்தைப் பார்த்து மனதில் என்ன ஓடுகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. அவர் ஒரு தலைசிறந்த போக்கர் (சீட்டுக்கட்டு) ஆட்டக்காரராகத் திகழ்ந்திருக்கலாம். அவரது அமைதியே 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல காரணமாக இருந்தது. அத்துடன் மின்னல் வேக விக்கெட் கீப்பிங்கில் தோனிக்கு நிகர் உலகில் யாருமே இல்லை" என்று புகழ்ந்தார்.


Click it and Unblock the Notifications

