"ஆஸ்திரேலியா ஜெயிக்க வேண்டி இந்திய அணியை உடைச்சார்".. கிரேக் சாப்பல் மீது ஹர்பஜன் குற்றச்சாட்டு
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான கிரேக் சாப்பல், தனது தாய்நாடான ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி பெரிதாக வளர்ந்து விடக்கூடாது, ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தக் கூடாது என திட்டமிட்டு இந்திய அணியை இரண்டாகப் பிளந்தார் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் குற்றம் சுமத்தி உள்ளார். யூடியூப் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாகப் பேசிய அவர், சாப்பலின் இரண்டாண்டு காலப் பயிற்சியே இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக இருண்ட மற்றும் கசப்பான அத்தியாயம் என்று கூறி இருக்கிறார்.
கிரேக் சாப்பலின் அணுகுமுறையை மிகக் கடுமையாக விமர்சித்த ஹர்பஜன் சிங், "கிரேக் சாப்பலை தலைமைப் பயிற்சியாளராக நியமித்ததே இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த வரலாற்றுப் பிழையான முடிவாகும். கேப்டன் சவுரவ் கங்குலியை அவர் நடத்திய விதம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையில் எடுத்த சாப்பல், வீரர்களை ஒருவருக்கொருவர் மோதவிட்டு வேடிக்கை பார்த்தார். 2003 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறி, குடும்பம் போல ஒன்றுபட்டு நின்ற வீரர்கள், சாப்பல் வந்த பிறகு ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதைக் கூட நிறுத்தினர். அந்த அளவுக்கு எங்கள் ஒற்றுமையை அவர் அடியோடு வேரறுத்தார்" என்றார்.

சாப்பலின் விபரீத திட்டம் குறித்து மேலும் பேசிய அவர், "சாப்பலின் உண்மையான திட்டம் வேறு ஒன்றாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் உலகக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்குத் தொடர்ந்து சவால் விடுத்த ஒரே பலம் வாய்ந்த அணி இந்தியாதான். இந்திய வீரர்கள் ஒன்றுபட்டு ஆடினால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி விடுவார்கள் என்பதால், திட்டமிட்டே அணியைப் பிளவுபடுத்தி எங்களை பலவீனமாக்கினாரா என்ற நியாயமான சந்தேகம் எனக்கு இப்போதும் உண்டு. இதன் எதிரொலியாகவே 2007 ஒருநாள் உலகக் கோப்பையில் வங்கதேசத்திடம் தோற்று லீக் சுற்றிலேயே இந்தியா பரிதாபமாக வெளியேறியது" என்று கூறினார்.
2005 ஜூன் மாதம் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற சாப்பல், 2007 உலகக் கோப்பை தோல்விக்குப் பின் இந்திய அணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார். சச்சின், டிராவிட், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் இருந்த டிரெஸ்ஸிங் ரூமிலேயே சாப்பல் விஷத்தை விதைத்ததாகவும், அதிலும் ஆஸ்திரேலிய அணியை இந்தியா ஜெயித்து விடக்கூடாது என அவர் செயல்பட்டதாகவும் பல ஆண்டுகளுக்குப் பின் ஹர்பஜன் சிங் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications

