ஹர்திக் பாண்டியாவை காண 2400 கிமீ நடந்து சென்ற ரசிகர்.. பதிலுக்கு இதயத்தை வென்ற ஹர்திக்
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை நேரில் சந்திப்பதற்காக, ரவி குமார் ராவத் என்ற தீவிர ரசிகர் சுமார் 2,400 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஹர்திக் பாண்டியா தற்போது பெங்களூரில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ரவி குமார் ராவத் முதலில் ஹர்திக்கைச் சந்திப்பதற்காக மும்பைக்கு சுமார் 1,400 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார். பின்னர், பாண்டியா பெங்களூரில் முகாம் அமைத்துள்ளதை அறிந்ததும், தனது பயணத்தை பெங்களூரு வரை நீட்டித்தார். இந்த நீண்ட நடைபயணத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

தன் மீதான அன்பால் இவ்வளவு தூரம் நடந்து வந்த ரசிகரைக் கண்டு வியப்படைந்த ஹர்திக் பாண்டியா, அவருக்குத் தேவையான உதவிகளைக் கேட்டறிந்ததோடு, அவர் சொந்த ஊர் திரும்புவதற்கான ரயில் டிக்கெட்டையும் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவைச் சந்திப்பதற்காக ரசிகர்கள் இதுபோன்ற சவாலான பயணங்களை மேற்கொள்வது இது முதல் முறையல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒடிசாவைச் சேர்ந்த தீபக் குமார் என்ற ரசிகர் ஹர்திக்கைச் சந்திப்பதற்காக ஒடிசாவிலிருந்து பெங்களூருக்கு சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஏற்பட்ட காயங்கள் காரணமாக ஹார்திக் பாண்டியா போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா ஏ அணிக்காக அவர் விளையாடுவதாக இருந்தது. இருப்பினும், வலது காலின் கெண்டை எலும்பில் (right shin bone) ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியிலிருந்து விலக நேரிட்டது.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஹர்திக் பாண்டியாவைப் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ஹார்திக் பாண்டியாவுக்கு இணையான மற்றொரு வீரரைக் கண்டறிவது கடினம். அவர் அணியில் ஈடுசெய்ய முடியாத ஒரு வீரர். அவருக்கு மாற்றாக ஒருவரைத் தேட முயற்சிப்பதை விட, வேறுபட்ட முறையில் பங்களிக்கக்கூடிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
பாண்டியா அணியில் இல்லாத நிலையில், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டிக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications


