ஹர்திக் பாண்டியாவுக்கு விழுந்த அடி.. 2027 ஐபிஎல் வரை சிக்கல்தான்.. காயம் குறித்த அப்டேட்
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் காயம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ள 2027 ஐபிஎல் தொடர் வரை அவர் எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் ஆட முடியாத சூழல் உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியா காலின் உள் கெண்டைக்கால் தசைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் அவர் சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பிரபல விளையாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் தின்ஷா பர்திவாலா கடந்த வாரம் இவரது மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்து சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

தற்போதைய திட்டத்தின்படி, இன்னும் 3 வாரங்களுக்குப் பிறகே ஹர்திக் பாண்டியா லேசான ஜாக்கிங் பயிற்சியைத் தொடங்க முடியும். அதன்பின் அடுத்த 8 வாரங்களில் ஓட்டப்பயிற்சியின் தீவிரத்தை மருத்துவர்கள் படிப்படியாக அதிகரிப்பார்கள். காயம் மீண்டும் தீவிரமடையாமல் தடுக்க, உடற்பயிற்சிகளும் கவனமாகத் திட்டமிடப்பட்டுள்ளன. எனவே, அவர் முழு உடற்தகுதி அடைந்து எப்போது போட்டிகளில் விளையாடுவார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
கடந்த மே மாதம் 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியதே ஹர்திக் பாண்டியா விளையாடிய கடைசி கிரிக்கெட் போட்டியாகும். அதற்கு முன் மார்ச் மாதம் நடந்த 2026 டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்குப் பிறகு அவர் சர்வதேச அளவில் களமிறங்கவே இல்லை. இதனால் இங்கிலாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என பல முக்கியமான தொடர்களை அவர் தவறவிட்டுள்ளார்.
தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் அவர் சேர்க்கப்படவில்லை. மேலும் டிசம்பர் 13 அன்று தொடங்கும் இலங்கை தொடர் மற்றும் ஜனவரி 3 அன்று தொடங்கும் ஜிம்பாப்வே ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. ஐபிஎல் வரை அவர் ஆட முடியாது என்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

