"செல்ஃபி தரலனா அசிங்கப்படுத்துவீங்களா?" - காதலியுடன் வந்த ஹர்திக் பாண்டியா.. எல்லை மீறிய ரசிகர்
மும்பை: மைதானத்தில் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு எதிரணியை மிரள வைக்கும் ஹர்திக் பாண்டியா, பொது இடத்தில் ரசிகர் ஒருவர் காட்டிய வன்மத்தைக் கண்டு கொள்ளாமல் அமைதியாக கடந்து சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா எப்போதுமே ஊடக வெளிச்சத்தில் இருப்பவர். மைதானத்தில் அவரது ஆட்டத்திற்காகவும், வெளியில் அவரது வாழ்க்கை முறைக்காகவும் பேசப்படுபவர். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் 3-1 என இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் ஹர்திக் பாண்டியா. ஆசியக் கோப்பையில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்து, பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் கலக்கினார்.

வெற்றிக் களிப்பில் இருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு, கிறிஸ்மஸ் கொண்டாட்டம் முடித்துத் திரும்பும்போது ஒரு கசப்பான அனுபவம் நேர்ந்தது. மும்பை இந்தியன்ஸ் கேப்டனான ஹர்திக் பாண்டியா, நேற்று தனது காதலி மஹிகா சர்மாவுடன் இரவு உணவு அருந்துவதற்காக ஒரு பிரபல உணவகத்திற்குச் சென்றிருந்தார். அங்கிருந்து இருவரும் வெளியே வந்தபோது, வழக்கம் போல ரசிகர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.
தனது காதலியுடன் காரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த ஹர்திக், வழியில் நின்ற சில ரசிகர்களுக்குப் பொறுமையாக செல்ஃபி எடுக்க அனுமதித்தார். ஆனால், கூட்டம் அதிகமானதால் பாதுகாப்பு கருதி அவர் விரைவாகக் காரை நோக்கி நகரத் தொடங்கினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகரால் ஹர்திக் உடன் செல்ஃபி எடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், இந்தியில் "Bhaad me ja" (நாசமாப் போ / தொலைஞ்சு போ) என்று சத்தமாகத் திட்டியுள்ளார். சுற்றியிருந்தவர்கள் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், ஹர்திக் பாண்டியா அந்தத் துளிக்கூடக் கண்டுகொள்ளவில்லை. காதலி மஹிகாவுடன் அமைதியாகக் காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டார்.
விளையாட்டு வீரர்களைக் கடவுளாகக் கொண்டாடும் அதே ரசிகர்கள், ஒரு செல்ஃபி கிடைக்கவில்லை என்பதற்காக இப்படிப் பொது இடத்தில் வன்மத்தைக் கக்குவது சரியா என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
களத்திற்கு வெளியே இவ்வளவு பரபரப்பு இருந்தாலும், களத்திற்குள் ஹர்திக் நல்ல ஃபார்மில் இருக்கிறார். காயம் காரணமாகப் சில மாதங்கள் ஓய்விலிருந்த அவர், தென்னாப்பிரிக்கத் தொடரில் அதிரடியாகத் திரும்பினார். 4 போட்டிகளில் 142 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் என ஆல்-ரவுண்டராக ஜொலித்தார்.
கடைசிப் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் அரைசதம் அடித்த பிறகு, பார்வையாளர் பகுதியில் இருந்த தனது காதலி மஹிகாவைப் பார்த்து அவர் 'ஃபிளையிங் கிஸ்' கொடுத்தது செம வைரல் ஆனது நினைவிருக்கலாம். தென்னாப்பிரிக்கப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் கூட, "இரண்டு அணிகளுக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசமே ஹர்திக் பாண்டியாதான். அவர்தான் தொடர் நாயகன் விருதுக்குத் தகுதியானவர்" எனப் பாராட்டியிருந்தார்.


Click it and Unblock the Notifications