மும்பை: ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பைத் தொடருக்கான துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக பும்ரா நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்திய அணியின் துணைக் கேப்டன் பதவிக்கான சர்ச்சை மீண்டும் தொடங்கியுள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் துணைக் கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, ஒருநாள் போட்டிகளுக்கான துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ரோகித் சர்மா இல்லாத போது ஹர்திக் பாண்டியாவே இந்திய அணியை வழிநடத்தி வந்தார். அண்மையில் கூட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்தார். இந்த நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்.
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டார் பும்ரா. வெற்றிபெற்ற போதும், நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய சில பிரச்சனைகள் அணியில் இருப்பதாக கூறினார். இதனால் தோல்விக்கு சரியாக பதில் கூட அளிக்கக் தெரியாத ஹர்திக் பாண்டியாவுடன், பும்ரா மிகச்சிறந்த தலைமையாக பார்க்கப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக பும்ரா இருந்து வருகிறார். ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். அதேபோல் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களையும் பும்ராவால் எளிதாக கட்டுப்படுத்த முடியும். ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் களமிறங்கவே இல்லை.
இதனால் சீனியர் வீரர்களை கட்டுப்படுத்துவதிலும் ஹர்திக் பாண்டியா பின்னடைவை சந்தித்து வருகிறார். அதேபோல் பேட்டிங்கிலும் ஹர்திக் பாண்டியா பெரிய ஃபார்மில் இல்லை. இதனால் எதிர்வரும் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் பிசிசிஐ முடிவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.