ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய இன்றைய ஆட்டம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை. 215 ரன்கள் என்ற இலக்கை எட்டுவது என்பது சுலபமான காரியம் கிடையாது.
ஆனால் அதனை ஹைதராபாத் அணி கச்சிதமாக செய்து முடித்தது. குறிப்பாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டபோது. ஹைதராபாத் அணி வீரர்கள் இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டனர்.
அதுவும் குறிப்பாக ஒரு பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதில் கேட்ச் ஆகி ராஜஸ்தான் ஜெயித்து விட்டோம் என கொண்டாடிய நிலையில் அது நோபால் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைத்த பிரீ ஹிட் வாய்ப்பை பயன்படுத்தி அப்துல் சமத் சிக்ஸர் அடித்து ஐதராபாத் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

இது குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், இது போன்ற போட்டிகள் தான் ஐபிஎல் தொடரை மிகவும் ஸ்பெஷல் ஆக மாற்றுகிறது. நீங்கள் வென்றுவிட்டதாக அறிவிக்கப்படும் வரை உங்களால் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று நினைக்க முடியாது. சந்திப் சர்மா மீது நான் நல்ல நம்பிக்கையில் இருந்தேன்.
சிஎஸ்கே எதிரான ஆட்டத்தில் அவர்தான் வெற்றியை தேடி கொடுத்தார்.ஆனால் கடைசி நோபால் எங்களுடைய வெற்றியை பறித்தது. நிச்சயமாக ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களை நாம் பாராட்ட வேண்டும். அவர்கள் அறிவுபூர்வமாக இன்றைய ஆட்டத்தில் விளையாடினார்கள். ஐபிஎல் தொடரில் விளையாடுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது.
ஒவ்வொரு ஆட்டத்திலும் நாம் சிறந்து விளையாட வேண்டும். இனி எஞ்சிய ஆட்டத்திலும் நாங்கள் மீண்டும் முதலில் இருந்து தொடங்கி வெற்றி பெற வேண்டும். தொடர்ந்து தோல்வியே தழுவி வருவது ஏமாற்றத்தை அளித்தாலும், இன்று பேட்டிங்கில் நாங்கள் கொஞ்சம் முன்னேற்றத்தை சந்தித்தோம் என்று சஞ்சு சாம்சன் கூறினார். இந்த பேட்டியை கொடுக்கும் போது மிகவும் மன வருத்தத்துடன் முகத்தை வைத்துக்கொண்டு அவர் பேசினார்.