பெங்களூர்:
இந்தியன் பிரீமியர் லீக்கின், 44 நாள் டுவென்டி 20 போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது. பெங்களூரில் நடைபெறும் முதல் போட்டியில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டிராவிட் தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் அமைப்பின் முதலாவது டுவென்டி 20 போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது. 8 அணிகள் இதில் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. 44 நாட்களுக்கு இப்போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.
பெங்களூரில் இன்று தொடங்கும் முதலாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் களம் இறங்குகின்றன.
ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். விஜய் மல்லையாவின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் செயல்படவுள்ளார்.
கொல்கத்தா அணியில் ரிக்கி பான்டிங், இஷாந்த் சர்மா உள்ளிட்ட மாபெரும் வீரர்கள் உள்ளனர். பெங்களூர் அணியில் ஜாக்கஸ் கல்லிஸ், அனில் கும்ப்ளே ஆகிய அனுபவசாலிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய ஒரு நாள் அணியில் இடம் பெற கடுமையாக போராடி வரும் கங்குலியும், டிராவிடும் இந்த போட்டித் தொடரில் எப்படி விளையாடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏகமாகவே உள்ளது.
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் விளக்கொளியில் நடைபெறவுள்ள இப்போட்டியைக் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.
இன்றைய போட்டியில் அனில் கும்ப்ளே ஆட மாட்டார் என்று தெரிகிறது. காயம் காரணமாக அவர் அவதிப்பட்டு வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.