குஜராத்தை தெறிக்கவிட்ட ரிஷப் பந்த்.. ஆனால் 3 ரன்னில் சதத்தை தவற விட்டார்!!
டெல்லி: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் டெல்லி அணி வீரர் ரிஷப் பந்த்.
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டேவில்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.

209 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தி சென்ற டெல்லி அணிக்கு சிறந்த ஓபனிங் தந்தார் சாம்சன். 31 பந்துகளில் 61 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய கே.கே. நாயர் 12 ரன்களுடன் நடையை கட்டினார்.
இதையடுத்து நங்கூரம் போட்டு நின்ற இளம் வீரர் ரிஷப் பந்த் எதிரணியை குலை நடுங்க செய்துவிட்டார். சங்வான் வீசிய 5வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்ஸர், 1 பவுண்டரி விரட்டிய ரிஷப், ரெய்னா வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு 27 பந்தில் அரை சதம் அடித்தார்.
தொடர்ந்து குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த ரிஷப், பால்க்னர் வீசிய 11 ஓவரில் 3 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசினார். அபாரமாக ஆடிய ரிஷப் பந்த் 43 பந்தில் 9 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்து அவுட்டாகினார். இதனால் 3 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் இறுதியில் டெல்லி அணி 17.3 ஓவர்களில் 214 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது ரிஷப் பந்திற்கு வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications