Hong Kong Sixes: கத்துக்குட்டி யுஏஇ அணியிடமும் இந்தியா படுதோல்வி.. 'பவுல்' பிரிவுக்கு தள்ளப்பட்டது
மாங் காங்: ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது தோல்வியைச் சந்தித்து பரிதாபமாக கடைசி இடத்தை பிடித்தது. முதலில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த நிலையில், அடுத்து நடைபெற்ற குரூப் சி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியிடமும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இதன் மூலம் குரூப் சி பிரிவில் விளையாடிய 2 போட்டிகளிலுமே தோற்று இந்திய அணி கடைசி இடமான 3-வது இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளையும் வீழ்த்திய யுஏஇ முதலிடத்தையும், இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் 2-வது இடத்தையும் பிடித்தன. இந்தத் தொடரின் விதிப்படி முதலிடம் பிடிக்கும் அணி முக்கிய கோப்பைக்கான 'கப்' அரையிறுதிக்கும், 2-வது இடம் பிடிக்கும் அணி 'பிளேட்' அரையிறுதிக்கும், கடைசி இடம் பிடிக்கும் அணி ஆறுதல் கோப்பைக்கான 'பவுல்' அரையிறுதிக்கும் முன்னேறும். 3-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி தற்போது பவுல் சுற்றுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

6 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்தது. ராகுல் திரிபாதி 7 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சாளரான நடராஜன் யாரும் எதிர்பாராத விதமாக பேட்டிங்கில் மிரட்டி 14 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். ஆனால் முக்கிய பேட்டர்களான நிதிஷ் ராணா 6 ரன்களிலும், ராகுல் தெவாதியா மற்றும் ஷஷாங்க் சிங் ஆகியோர் தலா 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
நடராஜனின் அதிரடியால் மட்டுமே இந்தியா 94 ரன்களை எட்டியது. பின்னர் 95 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய யுஏஇ அணி ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் வெறும் 4.2 ஓவர்களிலேயே 97 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரரும் கேப்டனுமான காலித் ஷா 14 பந்துகளில் 52 ரன்களும், மற்றொரு தொடக்க வீரர் தாண்டன் 12 பந்துகளில் 39 ரன்களும் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர். ஐபிஎல் நட்சத்திரங்கள் பலர் இருந்தும் இந்திய அணி அடுத்தடுத்து தோற்றது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

