சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் மிகப்பெரிய குறையே கடைசி கட்ட ஓவரில் சிறப்பான யாக்கர்களை வீச வீரர் இல்லை என்பதுதான். மும்பை அணியின் பல வெற்றியை பெற்றதற்கு மலிங்கா தான் காரணமாகும்.
ஏன் 2019 ஆம் ஆண்டு ஐ பி எல் கோப்பையை மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றதற்கு கடைசி பந்தில் மலிங்கா வீசிய யாக்கரே காரணம். இதனால் அப்போதிலிருந்து தோனி மலிங்கா போன்ற ஒரு வீரரை சிஎஸ்கே அணிக்கு கண்டுபிடிக்க வேண்டும் என முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி இலங்கை வீரர் பதிரானாவை ஏலத்தில் எடுத்தது. அவர் தற்போது பெங்களூர் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் கடைசி இரண்டு ஓவர்களை சிறப்பாக வீசி சிஎஸ்கே அணிக்கு வெற்றியை அளித்தார். இதனால் சிஎஸ்கேவுக்கும் ஒரு மலிங்கா கிடைத்துவிட்டார் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பதிரானாவை சிஎஸ்கே மூன்றாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பதிரானா 17 வயதிற்கும்போது சனத் ஜெயசூர்யா நடத்திவரும் பள்ளியில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அதில் அவர் வீசிய யாக்கர்கள் பேட்ஸ்மேன்களை நிலை குறைய வைத்திருக்கிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த தோனி, 2020 ஆம் ஆண்டு பதிரானாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.அதில் கொரோனா ஊசியை செலுத்திக்கொண்டு உடனே துபாய்க்கு புறப்பட்டு வருமாறு கூறி இருக்கிறார். அப்போது கொரோனா உச்ச கட்டத்தில் இருந்ததால் பதிரானாவால் செல்ல முடியவில்லை.
அதற்குள் பதிரானாவை மற்ற அணிகள் தட்டி செல்ல முடிவெடுத்தது. ஆனால் விடாப்பிடியாக நின்ற தோனி, அவரை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வந்தார். இந்த மூன்று ஆண்டுகளில் பதிரானா தனது திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். பதிரானா தொடர்ந்து சிறப்பாக யாக்கர்களை வீசினால் சிஎஸ்கே அணியும் மும்பை போல் வீழ்த்த முடியாத அணியாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.