Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

19 வயது.. வறுமையான குடும்பம்.. போர் பூமியில் இருந்து ஐபிஎல் ஹீரோ.. ஆப்கானிய புயல் ரஷீத் கான்!

சென்னை: ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான வீரராக உருவெடுத்து இருக்கிறார். இதோ இந்த ஐபிஎல் தொடரிலும் இவர் அதிக எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி உள்ளார்.

ஒரு 19 வயது நபர் அவர் நாட்டு கிரிக்கெட் அணிக்கு விளையாட எந்த கஷ்டம் எல்லாம் அனுபவிக்க வேண்டுமோ அந்த கஷ்டம் எல்லாம் அனுபவித்து இருக்கிறார் ரஷீத் கான். இவரது 19 வருட வாழ்க்கை ஒரு ரியல் ஸ்லம்டாக் மில்லியனர் படம்.

இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் டோணி, கோஹ்லி, ரோஹித், ரெய்னா, அஸ்வின் எல்லோரையும் ஓரம் கட்டிவிட்டு பார்த்தால் தனியாக இவர் தெரிவார். ஒரு சின்ன நாட்டில் இருந்து வந்த சின்ன வீரர் நினைக்க முடியாத பல உயரங்களை அடைந்து வருகிறார்.

யார் இவர்

யார் இவர்

ரஷீத் கான் ஆப்கான் அணியின் ஆல்ரவுண்டர். இவருக்கு 19 வயது மட்டுமே ஆகிறது. தற்போது இவர்தான் சர்வதேச டி-20 பவுலர்களில் நம்பர் ஒன். அதிவேகமாக 100 விக்கெட் எடுத்த வீரர் இவர்தான். பவுலிங்கில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் பொறி பறக்க விடுகிறார்.

போர்

போர்

போர் தேசமான ஆப்கானின் வறுமையான குடும்பத்தில் பிறந்ததில் இருந்து இவருடைய வாழ்க்கைக்கான போரும் தொடங்கிவிட்டது. நங்கர்ஹர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் 15 வயது வரை டென்னிஸ் பந்தில் தெருவில் விளையாடி இருக்கிறார். ஆனால் அசாத்திய திறமை வெறும் மூன்று வருடத்தில் இவரை உலக வைரலாக்கி இருக்கிறது.

சாப்பிட காசு இல்லை

சாப்பிட காசு இல்லை

இவருக்கு சிறு வயதில் சாப்பிட கூட வீட்டில் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இவரது வளர்ச்சியும் பாதியில் நின்றது. ஆனால் விடாமல் பள்ளி அணி, கிளப் அணி, உள்ளூர் அணி, மாநில அணி என்று இவர் கொஞ்சம், கொஞ்சமாக வறுமையோடும், எதிரணி பவுலருடனும் மோதி முன்னேறினார்.

ஏ அணியில் சேர்ந்தார்

ஏ அணியில் சேர்ந்தார்

கடைசியில் அது நடந்தது. ஆப்கான் ஏ அணியில் சேர்ந்தார். அன்று முதல் இவர் தன்னுடைய ஸ்பின் மூலம் இளம் வீரர்களை திணறடித்தார். ஆனால் இரண்டு வருடம் வரை அவர் அங்குதான் விளையாட வேண்டி இருந்தது. அவரது உடல் அமைப்பு கிரிக்கெட் வீரர் போல இல்லை என்று சக வீரர்கள் கிண்டல், கேலிகள் செய்து இருக்கிறார்கள்.

கஷ்டம்

கஷ்டம்

அதன்பின் அக்டோபர் 18, 2015 ஜிம்பாபேவ் அணிக்கு எதிராக முதல்முறையாக ஆப்கான் அணிக்காக விளையாடினார். அந்த ஒருநாள் போட்டி ஒன்றும் அவர் வாழ்க்கையை மாற்றவில்லை. மற்ற ஆப்கான் வீரர்கள் போல இவருக்கு என்ன திறமை இருந்துவிட போகிறது என்றுதான் இந்த உலகமே நினைத்துக் கொண்டு இருந்தது. ஆனால் அந்த கிரிக்கெட் உருவம் இல்லாத உடலுக்குள் வேறு ஒரு திட்டம் இருந்தது.

நிரூபித்தார்

நிரூபித்தார்

ஐயர்லாந்திற்கு எதிராக நடந்த டி-20 போட்டி ஒன்றில் இவர் 5 விக்கெட் எடுத்தார். அந்த அணியை மொத்தமாக தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அவர் கொடுத்தது மொத்தமாக 3 ரன் மட்டுமே! சென்ற வருடம் இவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வெறும் 18 ரன்கள் கொடுத்து 7 விக்கெட் எடுத்தார். சென்ற வருடம் மட்டும் இவர் 60 விக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார்.

ஐபிஎல் சாதனை

ஐபிஎல் சாதனை

அதோடு இல்லாமல் சென்ற வருடம் இவரை சன்ரைசர்ஸ் அணி 4 கோடி கொடுத்து வாங்கியது. ஒரு ஆப்கான் வீரர் இவ்வளவு விலைக்கு ஏலம் போனது அதுவே முதல்முறை ஆகும். 32 ஐசிசி ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 112 விக்கெட்டுகள் எடுத்து பெரிய சாதனை செய்துள்ளார். தற்போது மீண்டும் இவரை ஹைதராபாத் அணி 9 கோடி கொடுத்து எடுத்துள்ளது. அனைத்து அணிகளும் இவருக்கு போட்டியிட்ட நிலையில் ஆர்டிஎம் மூலம் இவர் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

கவனம் ஈர்த்தார்

கவனம் ஈர்த்தார்

தொடர் சாதனையால் கிரிக்கெட் உலகம் இவரை கவனிக்க தொடங்கியது. சென்ற வருடம் ஐசிசி மிக முக்கியமான வீரர்களின் பட்டியலில் இவரை வைத்து இருந்தது. இவர் ஐசிசியின் சிறந்த இணை வீரர் விருது வாங்கினார். இப்போது ஆப்கான் அணிக்கு தற்காலிக கேப்டனாக இருக்கிறார்.

வருவார்

வருவார்

இதோ தற்போது ஐபிஎல் போட்டிக்காக இவர் பயிற்சியில் இறங்கி உள்ளார். சில வாரம் முன்புதான் தன்னுடைய அணியை கஷ்டப்பட்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் வெற்றிபெற வைத்து சாதனை படைத்தார் இந்த இளம் கேப்டன். இப்போது சன்ரைசர்ஸ் அணிக்காக சாதனை படைக்க காத்துக் கொண்டு இருக்கிறார், அந்த கிரிக்கெட் உருவம் இல்லாத குட்டி பையன்!

Story first published: Wednesday, April 4, 2018, 17:15 [IST]
Other articles published on Apr 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+