விராட் கோலிக்காக கம்பீர் விட்டு கொடுத்த கதை தெரியுமா? வளர்த்த கடா மார்பில் முட்டியது.. விவரம்
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது விராட் கோலி, கவுதம் கம்பீர் ஆகியோர் இரு துருவங்களாக இருக்கிறார்கள். இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வது தொடர் கதையாகி விட்டது. நேற்றைய ஆட்டத்தில் இருவரும் நடந்து கொண்ட விதம், மேலும் விரிசலை அதிகப்படுத்தியுள்ளது.
விராட் கோலியும் கம்பீரும் ஒரு காலத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தனர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? விராட் கோலியும், கம்பீரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள். ரஞ்சி கோப்பைக்காக ஒரு அணியில் விளையாடி இருக்கிறார்கள்.

சொல்லப் போனால் கம்பீர், விராட் கோலியின் வளர்ச்சிக்கு பெரிய துணையாக இருந்தார். 13 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு கதையை சொன்னால், உங்களுக்கு ஒரு உண்மை புரியும். 2009ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இந்தியாவும், இலங்கையும் 4வது ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை 315 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, விராட் கோலியும், கவுதம் கம்பீரும் ஜோடி சேர்ந்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்த ஆட்டத்தில் தான் விராட் கோலி தனது முதல் சதத்தை சர்வதேச கிரிக்கெட்டில் அடித்தார். ஆனால், அந்த ஆட்டத்தில் கம்பீர் அதிகபட்சமாக 150 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆனால், இந்த விருதை வாங்காத கம்பீர், விராட் கோலிக்கு இது முதல் சதம். அவரை ஊக்குவிக்கும் விதமாக இந்த ஆட்ட நாயகன் விருதை அவருக்கு வழங்குகிறேன் என்று கூறினார்.
இப்படி விராட் கோலிக்கு தொடர்ந்து கம்பீர் ஆதரவு வழங்கினார். ஆனால்,விராட் கோலி இந்த பழைய கதையை எல்லாம் மறந்து, கம்பீரையே விமர்சனம் செய்வதும், அவருடன் கோபமாக நடப்பதும் என்று இப்படி நடந்து கொள்வது வேதனை அளிப்பதாக கம்பீர் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications