அவர மாத்தி ஆட சொன்னோம்.. ஜெயிச்சுட்டோம்.. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான வெற்றி ரகசியம் சொன்ன மோர்டாசா
டான்டன்: 3வது வீரராக களம் இறங்க வேண்டிய நபரை, 5வது வீரராக களம் இறக்கியதே வெற்றிக்கு முக்கிய காரணம் என்று வங்கதேச கேப்டன் மோர்டாசா கூறியிருக்கிறார்.
உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீசும், மோர்டாசா தலைமையிலான வங்க தேசமும் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹோப் 96 ரன்களும், லீவிஸ் 70 ரன்களும் குவித்தனர். பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேசம் 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆட்ட நாயகன்
அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 124 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். போட்டி முடிந்து வெற்றி குறித்து வங்கதேச கேப்டன் மோர்டாசா கூறியதாவது: நான் சொன்ன மாதிரி தான் நாங்கள் ஜெயிக்க வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

பவுலர்கள் அபாரம்
மேலும் அனைத்து போட்டிகளிலும் ஜெயித்தே ஆகவேண்டும். அந்த நிலை தற்போது உள்ளது. எனது முழங்கால் வலி என்னை வாட்டியது. அணியில் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஷாகிப் அல் ஹசன் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்தார்.

5வது வீரர்
2 போட்டிகளாக ரஹீம் சிறப்பாக விளையாடினார். சவுமியா சர்க்கார் மற்றும் தமீம் ஆகியோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். லிட்டன் தாஸ் வழக்கமாக நம்பர் 3 இடத்தில் தான் விளையாடுவார். ஆனால் அவரை 5வது இடத்தில் ஆடும்படி கேட்டுக் கொண்டோம். அவரும் அதனை ஏற்று விளையாட, அதுவே வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்றார்.

5ம் இடம்
இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்களில் 5 புள்ளிகள் பெற்று 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது வங்கதேசம். அதே நேரத்தில், 5 ஆட்டங்களில் வெறும் 3 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications