சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் குவாலிபையர் ஆட்டத்தின் 2வது ஓவரில் நடந்த டிவிஸ்ட் ஒன்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்யும் சிஎஸ்கே பெரிய இலக்கை அடிக்க வேண்டிய நெருக்கடியில் களமிறங்கினர். இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், இரண்டாவதாக பந்துவீசும் போது சிரமமாக இருக்கும்.

இதனால், ருதுராஜ் மற்றும் கான்வே பெரிய தொடக்கத்தை கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தனர். இந்த நிலையில், ஆட்டத்தின் 2வது ஓவரை வீசிய தர்ஷன் நலக்கண்டே, ருதுராஜ் கெய்க்வாட்டை ஆட்டமிழக்க செய்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது போன்ற முக்கியமான ஆட்டத்தில் டக் அவுட் ஆகி விட்டோமே என்று ருதுராஜ் கெய்க்வாட்டும் சோகத்தில் நடந்து பெவிலியன் நோக்கி சென்றார். அப்போது தான் இது நோ பால் என்று மூன்றாம் நடுவர் அறிவித்தார்.
இதனையடுத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு பிரிந்த உயிர் மீண்டும் வந்தது. இது போன்ற வாய்ப்பு கிடைத்தால் ருதுராஜ் சும்மா விடுவாரா, இதனால் பிரி ஹிட் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சிக்சர் விளாசினார். இதே போன்று , அதே ஓவரில் பவுண்டரியும் அடித்தார். இதன் மூலம் அந்த ஓவரில் 14 ரன்கள் சென்றது.
இதன் மூலம், சிஎஸ்கே அணிக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி கொண்டு சிஎஸ்கே தொடக்க வீரர்கள் பெரிய இலக்கை எட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. குஜராத் அணி சேஸிங்கில் இதுவரை 3 முறை தான் தோல்வியை தழுவி இருக்கிறது என்பது குறிப்படத்தக்கது.