மாபெரும் டி20 சாதனை.. சுரேஷ் ரெய்னாவின் ரெக்கார்டை முறியடித்த இங்கிலாந்து வீரர் டேவிட் மலான்
லண்டன்: இங்கிலாந்தின் அதிரடி இடதுகை பேட்ஸ்மேனான டேவிட் மலான், டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம், இந்திய அணியின் முன்னாள் வீரரும், "சின்ன தல" என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான சுரேஷ் ரெய்னாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 'தி ஹன்ட்ரட்' தொடரில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வரும் டேவிட் மலான், ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். இந்தப் போட்டியின் போதுதான், டி20 கிரிக்கெட்டில் ஒரே நாட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

டேவிட் மலான் இதுவரை இங்கிலாந்தில் மட்டும் 240 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி 6555 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 சதங்களும், 43 அரை சதங்களும் அடங்கும். சுரேஷ் ரெய்னா, இந்தியாவில் 237 டி20 இன்னிங்ஸ்களில் 6553 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது, வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ரெய்னாவை மலான் முந்தியுள்ளார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தச் சாதனைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் இந்திய வீரர்களே ஆக்கிரமித்துள்ளனர் என்பதுதான். விராட் கோலி முதலிடத்தில் அசைக்க முடியாதபடி உள்ளார். அவர் இந்தியாவில் மட்டும் 9704 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
ரோஹித் சர்மா 8426 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ஷிகர் தவான் 7626 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வின்ஸ் 7398 ரன்களுடன் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
டி20 கிரிக்கெட்டில் ஒரே நாட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்:
- 1. விராட் கோலி - 9704 ரன்கள் - இந்தியா
- 2. ரோஹித் சர்மா - 8426 ரன்கள் - இந்தியா
- 3. ஷிகர் தவான் - 7626 ரன்கள் - இந்தியா
- 4. ஜேம்ஸ் வின்ஸ் - 7398 ரன்கள் - இங்கிலாந்து
- 5. டேவிட் மலான் - 6555 ரன்கள் - இங்கிலாந்து
- 6. சுரேஷ் ரெய்னா - 6553 ரன்கள் - இந்தியா
"இந்திய அணியில் இடமில்லை.. அந்த 2 மணி நேரம் மறக்க முடியாது" ரிங்கு சிங்கை நெகிழ வைத்த ஷாருக்கான்..
'தி ஹன்ட்ரட்' தொடரின் புள்ளிவிவரங்களும் டி20 கிரிக்கெட் சாதனைகளில் சேர்க்கப்படுவதால், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2025 ஹன்ட்ரட் தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கும் மலான், இதுவரை 7 இன்னிங்ஸ்களில் 179 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிரடி ஆட்டம், நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications