
கோவா அணியில் சச்சின் மகன்
சில மாதங்களுக்கு முன் மும்பை அணியில் தனக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று அர்ஜூன் டெண்டுல்கர் பேசி இருந்தார். இதன் காரணமாக ரஞ்சி டிராபி தொடரில் கோவா அணிக்கு மாறினார். இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரின் முதல் போட்டியில் கோவா - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கோவா அணியில் சுயாஷ் பிரபுதேசாயை தவிர்த்து அனைத்து வீரர்களும் திணறினர்.

அறிமுக போட்டியில் சதம்
இதனைத் தொடர்ந்து 7வது வீரராக களமிறங்கிய அர்ஜூன் டெண்டுல்கர் நிதானமாக விளையாடி சதம் விளாசியுள்ளார். இதன் மூலம் ரஞ்சி டிராபி அறிமுகமான முதல் போட்டியில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை அர்ஜூன் டெண்டுல்கர் பெற்றுள்ளார். 23 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கர் தந்தையை போலவே, இடதுகை பழக்கம் கொண்டவர்.

தந்தையை போல் மகன்
அதுமட்டுமல்லாமல் தந்தையை போலவே ரஞ்சி டிராபி தொடரின் அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி அசத்தியுள்ளார். 1988ம் ஆண்டு 15 வயதில் ரஞ்சி டிராபி தொடரில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், குஜராத் அணிக்கு எதிராக சதம் விளாசி அசத்தி இருந்தார். இதன் மூலம் அர்ஜூன் டெண்டுல்கர் மீது மீண்டும் வெளிச்சம் விழுந்துள்ளது.

மும்பை அணியில் அர்ஜூன்
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அர்ஜூன் டெண்டுல்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை ஒரு போட்டியில் கூட களமிறங்கியதில்லை. தற்போது பேட்டிங்கில் நிரூபித்துள்ள அர்ஜூன், விரைவில் பந்துவீச்சிலும் தனது திறமையை நிரூபித்தால், வரும் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











