லக்னோ: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சாஹல் பந்தில் திணறிய ஹாரி புரூக், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பிஷ்னாய் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இந்திய ஆடுகளங்களில் ஹாரி புரூக் தொடர்ந்து சுழலுக்கு திணறி வருவது ஐதராபாத் அணி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மினி ஏலத்தில் ஐதராபாத் அணி தரப்பில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி புரூக்-க்கு ரூ.13.25 கோடி விலை கொடுக்கப்பட்டது. இதனால் ஐதராபாத் அணியின் ரசிகர்கள் மிடில் ஆர்டர் பிரச்சனை தீர்ந்தது என்று நினைத்தனர். அவருடன் மார்க்ரம், கிளாஸன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் இருப்பதால், நிச்சயம் ஐதராபாத் அணி கம்பேக் கொடுக்கும் என்று பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஐதராபாத் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஆடியது. அந்தப் போட்டியில் ரூ.13.25 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்ட ஹாரி புரூக் 21 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் இந்திய ஆடுகளங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும் சூழலில், சாஹல் பந்தில் களத்திலேயே பரதநாட்டியம் ஆடினார். இதனால் ஐதராபாத் அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை வரும் போட்டியில் ஹாரி புரூக் சரி செய்வார் என்று ஐதராபாத் அணி தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இதில் அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்ததால், ஐதராபாத் அணி சிக்கலில் சிக்கியது. இந்த சிக்கலில் இருந்து அணியை மீட்க ஹாரி புரூக் களமிறக்கப்பட்டார்.
நிதானமாக ஆடிய ஹாரி புரூக், ரவி பிஷ்னாய் வீசிய பந்தில் வெறும் 3 ரன்களில் சுழலில் ஏமாற்றப்பட்டு ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரூ.13.25 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்ட ஹாரி புரூக், இந்திய ஆடுகளத்தில் சுழல் பந்துவீச்சிற்கு திணறுவது கண்கூடாக தெரிய வந்துள்ளது. அன்றையப் போட்டியில் சாஹலிடம் வீழ்ந்த புரூக், இன்று பிஷ்னாயிடம் வீழ்ந்துள்ளார். இருவரும் அதிக கூக்ளி பந்துகளை வீசக் கூடியவர்கள் என்பதும் கூடுதல் தகவல்.
இதனால் ஐதராபாத் அணி நிர்வாகம் ஹாரி புரூக் இடத்தில் தென்னாப்பிரிக்கா அணியின் கிளாசனை விளையாட வைக்கலாம் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மற்றும் டி20 தொடரில் சதம் விளாசி உச்சக்கட்ட ஃபார்மில் கிளாஸன் இருப்பது குறிப்பிடத்தக்கது.