திறமையும், நம்பிக்கையும் இருக்கு.. அறிமுக போட்டியில் சதம் அடித்தது எப்படி? அர்ஜூன் டெண்டுல்கர் பதில்
கோவா: எனது திறமை மீது எப்போதும் நம்பிக்கை உள்ளது என்று சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரஞ்சி டிராபி தொடரில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அர்ஜூன் டெண்டுல்கர் சதம் விளாசி அசத்தியதால், அவர் மீதான கவனம் அதிகரித்துள்ளது.
"நெப்போட்டிசம்" சினிமா, அரசியல், கிரிக்கெட் என இந்தியாவின் அனைத்து முக்கிய பொறுப்புகளிலும் வாரிசுகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அடிக்கடி குறிப்பிடப்பட்டு வந்தார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுத்தபோது, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார். இருப்பினும் மும்பை அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் கூட களமிறங்கியதில்லை.

அறிமுக போட்டியில் சதம்
அதேபோல் 23 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கர், ரஞ்சி டிராபி தொடரில் நீண்ட நாட்களாக மும்பை அணியில் இருக்கிறார். அங்கும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாறினார். இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கர், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.

என் மீது நம்பிக்கை
அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசி, வெளிச்சத்திற்கு வந்துள்ளார். இந்த ஆட்டம் குறித்து அர்ஜூன் டெண்டுல்கர் கூறுகையில், எனது திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. ஒரு சில ஓவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், என்னால் பெரிய ஸ்கோரை எடுக்க முடியும். இன்றைய ஆட்டத்தை பொறுத்தவரை, முதல் ஒரு மணி நேரம் கடினமாக இருந்தது.

என்ன திட்டம்?
அதேபோல் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது, சுயாஷ் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் விக்கெட்டுகளை இழந்து வந்தோம். அதனால் அதிக பந்துகளை எதிர்கொள்வது மட்டுமே என் திட்டமாக இருந்தது. அதன்பின்னர் ரன்கள் சேர்க்க தொடங்கினோம். அதன் மூலமாகவே சதம் சாத்தியமாகி இருக்கிறது என்று தெரிவித்தார்.

120 ரன்களுக்கு அவுட்
சிறப்பாக விளையாடிய அர்ஜூன் டெண்டுல்கர் 207 பந்துகளில் 120 ரன்கள் விளாசினார். அதேபோல் சுயாஷ் பிரபுதேசாய் 416 பந்துகளுக்கு 212 ரன்கள் விளாசினார். இதன் மூலம் கோவா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 547 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ராஜஸ்தான் - கோவா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications