ஐபிஎல் தொடர் அல்ல.. உள்ளூர் கிரிக்கெட்டே முக்கியமான களம்.. கம்பேக் கொடுக்க காத்திருக்கும் ருதுராஜ்!
மும்பை: ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் விஜய் ஹசாரே, ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதன் மூலமாகவும் இந்திய அணியில் இடம்பிடிக்கலாம் என்று சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் மிகமுக்கியமான வீரர் ருதுராஜ் கெயிக்வாட். இந்திய அணிக்காக விளையாட கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் ருதுராஜ் கெயிக்வாட் அசாத்தியங்களை சாத்தியமாக்கி வருகிறார்.
குறிப்பாக விஜய் ஹசாரே தொடரில் 6 பந்துகளில் 7 சிக்சர்களை விளாசியது ருதுராஜ் கெயிக்வாட்டை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்களோ இல்லையோ, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார்கள்.

இந்திய அணி
இந்த நிலையில் விஜய் ஹசாரே தொடர் முடிவடைந்து அடுத்த சில நாட்களிலேயே ரஞ்சி டிராபி தொடருக்கு தயாராகி வருகிறார். இதுகுறித்து இந்திய வீரர் ருதுராக் கெயிக்வாட் கூறுகையில், இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க ஐபிஎல் தொடர் மட்டுமே களம் அல்ல. உள்ளூர் தொடர்களான விஜய் ஹசாரே, ரஞ்சி டிராபி உள்ளிட்ட தொடர்களில் சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியில் இடம்பிடிக்கலாம்.

கலவையான மனநிலை
விஜய் ஹசாரே தொடரில் சில சாதனைகள் படைத்திருந்தாலும், கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது சோகமாகவே இருக்கிறது. விஜய் ஹசாரே இறுதிப்போட்டியில் மகாராஷ்டிரா அணி தோல்வியடைந்து கலவையான மனநிலைக்கு தள்ளியுள்ளது. வெற்றிக்கான வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டோம் என்று தெரிவித்தார்.

ஐபிஎல் பற்றி சிந்திக்கவில்லை
தொடர்ந்து ஐபிஎல் தொடர் பற்றிய கேள்விக்கு, இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடுவது பற்றி அவ்வளவாக சிந்திக்கவில்லை. ஐபிஎல் தொடருக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளது. அதற்கு முன், ரஞ்சி டிராபி தொடரில் விளையாட வேண்டும். ஒவ்வொரு முறை கிரிக்கெட் போட்டிகளில் சென்னை வரும் போது இங்கு தனி உணர்வு ஏற்படுகிறது.

தோனியின் அறிவுரைகள்
சென்னை அணியின் கேப்டனான தோனியுடன் விளையாடுவது அதிர்ஷ்டம் தான். அவருடன் ஓய்வறையில் இருப்பதே பெருமை. ஒவ்வொரு முறையும் அவருடன் விளையாடும் போது அறிவுரைகளை வரும். தேவையான நேரத்தில் சரியான அறிவுரைகளை வழங்குவார். அவரது அறிவுரைகள் என் பேட்டிங் வளர்ச்சிக்கு அதிகமாக உதவியுள்ளன.

சச்சின் டெண்டுல்கர்
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் உத்வேகம் அளித்த வீரர்கள் ஏராளாமானோர் இருக்கிறார்கள். ஆனால் சச்சின் டெண்டுல்கரை பார்த்த பின்னரே, நான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். அதன் பின், விராட் கோலியும், தோனியும் அதிகமாக பிடித்த மற்றும் உத்வேகம் அளிக்கக் கூடிய வீரர்களாக இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications