கொழும்பு: வங்கதேச அணிக்கு எதிராக தேவையின்றி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை பறிகொடுத்துவிட்டதாக இந்திய இளம் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. 266 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்யும் போது, சுப்மன் கில்லை தவிர்த்து அனைத்து வீரர்களும் வருவதும் போவதுமாக இருந்தனர். ஆனால் நிலைத்து நின்று ஆடிய சுப்மன் கில், 133 பந்துகளில் 121 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

நடப்பாண்டில் மட்டும் சுப்மன் கில் அடிக்கும் 6வது சதம் இதுவாகும். அதேபோல் கடினமான சூழ்நிலையில் சுப்மன் கில் நிலையாக விளையாடியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. சுப்மன் கில் வெற்றிக்காக கடைசி வரை போராடியது அவரின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் மிகச்சிறந்த இன்னிங்ஸாக அமைந்தது. ஆனால் இந்திய அணி தோல்வியடைந்ததால் சுப்மன் கில் சோகமடைந்துள்ளார்.
இதுகுறித்து சுப்மன் கில் பேசுகையில், ஸ்லோ பிட்ச்களில் எப்படி ரன்கள் சேர்ப்பது என்பதை நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். பெங்களூருவில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமிலும் இதேபோன்ற பிட்ச்களை அமைத்து தான் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டோம். ஏனென்றால் உலகக்கோப்பை தொடர் மிகப்பெரிய தொடராக நடக்கவுள்ளது. சில ஆட்டங்கள் நடைபெற்ற முடிவடைந்த பின், தொடர் பிற்பாதி ஆட்டங்களில் பிட்ச்கள் மிதமாக மாறிவிடும்.
அதனால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்ப்பாது அவ்வளவு எளிதாக இருக்காது. அதேபோல் டாட் பால்களை குறைப்பதற்காக தேவையையும் அறிந்துள்ளோம். இதுபோன்ற பிட்ச்களில் 1 ரன்கள் ஓடுவதே சிரமமான விஷயம் தான். அதனால் பந்தை பேட்டிற்கு வருவதற்காக காத்திருந்து விளையாடுகிறோம்.
சில நேரங்களில் நாம் தப்பு கணக்கு போடுவோம். நான் ஆட்டமிழந்த போது ஏராளமான நேரம் இருந்தது. தேவையின்றி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை பறிகொடுத்துவிட்டேன். ஆனால் இது மிகச்சிறந்த கற்றலுக்கான போட்டியாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.