ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதம் விளாச முடியவில்லை என்று சோகமாக இருப்பதாக தொடர்நாயகன் விருது வென்ற இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. அதேபோல் 17 ஆண்டுகளாக தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி புதிய சாதனையை உருவாக்கியுள்ளது.

இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் 3 போட்டிகளிலும் அரைசதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் 3 போட்டிகளில் 184 ரன்கள் குவித்த இஷான் கிஷன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதை பெற்றுக் கொண்ட இஷான் கிஷன், என் ஆட்டத்திற்கு சரியாக ஃபினிஷிங் கொடுக்க முடியாதது கவலை அளிக்கிறது. நீண்ட நேரம் விளையாடி களத்தில் செட்டாகி இருந்தால், பெரிய ஸ்கோரை விளாச வேண்டும். என் சீனியர்கள் அப்படிதான் அட்வைஸ் கொடுத்திருந்தார்கள்.
நான் நிச்சயம் இன்னும் சில மணி நேரம் களத்தில் இருந்து சதத்தை விளாசியிருக்க வேண்டும். அடுத்த முறை பெரிய இன்னிங்ஸை ஆடுவதே எனது திட்டமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் கடந்த கால வரலாற்றை மறந்து, பூஜ்ஜியத்தில் இருந்தே தொடங்குகிறேன். பெரிய இலக்கை வைத்துக் கொள்ளாமல், அப்போது வீசப்படும் பந்துகளிலும், ஓவரிலும் மட்டுமே கவனம் வைத்து கொள்கிறேன். சுப்மன் கில் மிகச்சிறந்த வீரர். அவரால் சரியாக மிடில் பேட்டில் விளாச முடிகிற போது, எனக்குள்ளும் நம்பிக்கை அதிகரிக்கிறது.
இந்திய அணியில் ஆடிய அனைத்து வீரர்களும் பாசிட்டிவ் மனநிலையுடன் விளையாடினோம். ஏற்கனவே ட்ரினிடாட் மைதானத்தில் சில போட்டிகளை விளையாடி இருக்கிறேன். அதனால் இங்கு விக்கெட் எப்படி இருக்கும் என்று நன்றாக தெரியும். அடுத்த டி20 உலகக்கோப்பை இங்கு நடப்பதை பற்றி பெரிதாக சிந்திக்கவில்லை. அடுத்தடுத்து வரும் தொடர்களில் தான் என் கவனம் இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு தொடரும் நம் வாழ்க்கையை மாற்றக் கூடியது என்று தெரிவித்துள்ளார்.