பஞ்சாப்: 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து விரைவாக வெளியேற வேண்டும் என்று நினைத்ததாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆர்சிபி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை கூட நிர்வாகிகள் சொல்லவில்லை என்று சுழற்பந்துவீச்சாளர் சாஹல் குற்றம்சாட்டி இருந்தார். இதனால் ஐபிஎல் அணிகளால் மோசமாக நடத்தப்பட்ட வீரர்கள் யார் என்ற விவாதம் ரசிகர்களிடையே தொடங்கியுள்ளது. இதில் டேவிட் வார்னர், பார்த்திவ் படேல் உள்ளிட்டோர் தங்களின் அனுபவங்களை வெளிப்படையாகவே கூறினர்.

ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பற்றி கூறியுள்ள கருத்துகள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கும் போது பஞ்சாப் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் செயல்பட்டார். இந்திய அணியில் கேப்டன்சி கொடுக்கப்படாததால் ஏமாற்றத்தில் இருந்த யுவராஜ் சிங் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் மகிழ்ச்சியாக இருந்தார்.
அதே மகிழ்ச்சியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை முதல் சுற்றிலேயே அரையிறுதிக்கு அழைத்து சென்றார். ஆனால் அரையிறுதியில் சென்னை அணியிடம் தோல்வியடைந்து பஞ்சாப் அணி வெளியேறியது. பின்னர் 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி 5வது இடத்தில் முடித்தது. இதன் பின்னரே பஞ்சாப் நிர்வாகத்தின் உண்மையான முகம் வெளி வந்ததாக யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக யுவராஜ் சிங் அளித்துள்ள பேட்டியில், ஒரு கட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து ஓடிவிட வேண்டும் என்று நினைத்தேன். அந்த அணியின் நிர்வாகத்தில் இருந்தவர்களுக்கு என்னை சுத்தமாக பிடிக்கவில்லை. நான் கேப்டனாக கேட்ட எந்த விஷயத்தையும் கிங்ஸ் லெவன் நிர்வாகம் தரப்பில் செய்து கொடுக்கப்படவில்லை. நான் கேட்ட வீரர்களை கூட ஏலத்தில் கிங்ஸ் லெவன் நிர்வாகத்தினர் வாங்கவில்லை.
ஆனால் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறிய பின் நான் பரிந்துரைத்த அத்தனை வீரர்களையும் வாங்கினார்கள். எனக்கு பஞ்சாப் அணியை மிகவும் பிடிக்கும். ஆனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்வாகத்தை சுத்தமாக பிடிக்காது என்று தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டன்சியில் இருந்து யுவராஜ் சிங் நீக்கப்பட்டு, ஜெயவர்தனே கேப்டனாக நியமனம் செய்யப்பட்தோடு, அந்த சீசனோடு யுவராஜ் சிங் ஏலத்தில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.