மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் 2 டி20 போட்டிகளில் பெரிய ஸ்கோரை அடிக்காததால், பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கண்களை எதிர்கொள்ளவே தயக்கம் கொண்டதாக நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். சிறுவயதில் இருந்தே கம்பீரிடம் இருந்து பாராட்டு பெற்றுவிட வேண்டும் என்ற ஆசை, அந்த சதத்தின் மூலம் நிறைவேறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். 47 பந்துகளில் 111 ரன்களை விளாசியதன் மூலமாக, டி20 கிரிக்கெட்டில் வரலாற்றில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றார். இதனால் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

வங்கதேச டி20 தொடர் தொடங்குவதற்கு 3 வாரங்களுக்கு முன்பாகவே பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரும், சஞ்சு சாம்சன் தான் தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் என்பதை முடிவு செய்து, அவரிடம் தெரிவித்தனர். அதன்பின் அவர் நேராக ராஜஸ்தான் ராயல்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பணியாற்றினார்.
இதன் பலனாக சஞ்சு சாம்சன் இந்திய டி20 அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். இதனால் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திலும் சஞ்சு சாம்சனுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் கவுதம் கம்பீரின் பாராட்டுகளை சஞ்சு சாம்சன் பெற்றது பலராலும் வியக்கப்பட்டு வருகிறது. வர்ணனையின் போது கம்பீர் பல்வேறு தருணங்களிலும் சஞ்சு சாம்சனை பாராட்டியுள்ளார்.
ஆனாலும் சஞ்சு சாம்சன் முழு திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் இருக்கும் போது சஞ்சு சாம்சன் சதமடித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள எல்பிஎஸ் அகாடமியில் தான் சஞ்சு சாம்சன் பயிற்சி பெற்றார்.
அப்போதே கவுதம் கம்பீரின் பாராட்டை பெற வேண்டும் என்று சஞ்சு சாம்சன் முனைப்புடன் இருப்பார். இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எனக்கு ஆதரவாக இருந்து தொடர்ந்து வாய்ப்புகளை அளிக்கும் போது, அவருக்கு ஏமாற்றத்தை அளிக்க கூடாது என்பதில் தீவிரமாக இருந்தேன். வங்கதேச டி20 தொடரில் போது முதல் 2 போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய ஸ்கோர்களை அடிக்க முடியவில்லை.
இதனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கண்களை நேராக எதிர்கொள்ளாமல் தயங்கி நின்றேன். அப்போது எனக்குள், நிச்சயம் பெரிய இன்னிங்ஸை விளையாடுவேன் என்று சொல்லி கொண்டேன். அது சரியாக கடைசி டி20 போட்டியில் நடந்துவிட்டது. ஐதராபாத் மைதானத்தில் சதமடித்த போது பயிற்சியாளர் கம்பீர் எழுந்து நின்று கைகளை தட்டியது பெருமையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.