கொல்கத்தா: தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு அறிவுரை வழங்கும் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் எனக்கு நேரடியாகவே மெசேஜ் அனுப்பலாம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகமுக்கியமான போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், நாளைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் விளையாடினால், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு முடிவுக்கு வரும்.

அதேபோல் நியூசிலாந்து அணியை விடவும் அதிக ரன் ரேட்டை எட்டுவதற்கு பாகிஸ்தான் 300 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணியை 13 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். ஒருவேளை 400 ரன்கள் சேர்த்தால் இங்கிலாந்து அணியை 112 ரன்களுக்கும், 450 ரன்கள் சேர்த்தால் 162 ரன்களுக்குள்ளும் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் 500 ரன்கள் சேர்த்தால் இங்கிலாந்து அணியை 211 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கேப்டன்சி பிரஷர் காரணமாக பாபர் அசாம் பேட்டிங் ஃபார்மை இழந்திருப்பதாக எழுந்த விமர்சனங்களுக்கு பற்றிய கேள்விக்கு, பாகிஸ்தான் அணிக்காக கடந்த 3 ஆண்டுகளாக கேப்டன்சியை மேற்கொண்டு வருகிறேன். இதுவரை ஒருபோதும் பிரஷரை உணர்ந்ததில்லை. உலகக்கோப்பை தொடரில் நான் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடாததே, தற்போது ரசிகரக்ள் நான் அழுத்ததில் இருப்பதாக கூறுவதற்கு காரணம் என்று நினைக்கிறேன். ஆனால் நான் எந்த அழுத்தத்திலும் இல்லை.
இதற்கு எப்படி கேப்டன்சி செய்தேனோ அப்படிதான் இப்போதும் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு முன் எப்படி பேட்டிங் செய்தேனோ, அப்படியே விளையாடி வருகிறேன். இதுபோன்ற விஷயங்கள் நமது பார்வையில் தான் இருக்கிறது. நான் இப்படி செய்திருக்க வேண்டும், அப்படி செய்திருக்க வேண்டும் என்று ஏராளமானோர் கூறுகிறார். தொலைக்காட்சி முன்னிலையில் இருந்து அட்வைஸ் செய்வது எளிதானது. ஒருவேளை யாராவது எனக்கு அறிவுரை கூற வேண்டும் என்று நினைத்தால், எனக்கே நேரடியாக மெசேஜ் செய்யலாம் என்று கூறியுள்ளார்.