மும்பை: மும்பை மைதானத்தில் எனது பயணத்தை சிந்திப்பதை காட்டிலும், இந்திய அணிக்காக உலகக்கோப்பை தொடரை வெல்வதே இப்போது என் கவனத்தில் உள்ளது என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்காக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு அரையிறுதி போட்டிகளே மிகப்பெரிய கண்டமாக அமைந்தது. இதனால் சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வரலாற்றை மாற்றும் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

இந்த நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் நான் இல்லை. அதனால் எந்த அணி பலம் வாய்ந்த அணி என்று எனக்கு தெரியவில்லை. அதேபோல் தற்போதைய அணியை காட்டிலும் 2019ஆம் ஆண்டு அணி பலம் வாய்ந்த அணியா என்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு வீரர்களின் ரோலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அதற்காக 2019ஆம் ஆண்டு வீரர்களின் ரோல்கள் என்ன என்பதை தெளிவாக கூறவில்லை என்று சொல்லவில்லை. 2019ஆம் ஆண்டு இந்திய அணி நிர்வாகத்திலும் நான் இல்லை. அதேபோல் நான் விளையாடிய அனைத்து உலகக்கோப்பை அணிகளுமே ஆதிக்கம் செய்துள்ளது. அதேபோல் மும்பை மைதானத்தில் விளையாடுவதால் எனது பயணத்தை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை. என்னை பொறுத்தவரை உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தான் இலக்கு. நவ.19ஆம் தேதிக்கு பின் அதனை பற்றி யோசிக்கலாம்.
இந்த உலகக்கோப்பையில் ஒவ்வொரு ரோலுக்கும் சில வீரர்கள் மீது கடைசி வரை நம்பிக்கை வைத்தோம். அதற்காக ராகுல் டிராவிட்டுக்கு தான் நன்றி கூற வேண்டும். இதனை எதிர்காலத்திலும் தொடர்வோம் என்று நினைக்கிறேன். மேலும், என்னை பொறுத்தவரை டி20 உலகக்கோப்பையை விடவும் 50 ஓவர் உலகக்கோப்பை தான் மிகமுக்கியமானது. அதேபோல் 3 வகையான கிரிக்கெட்டும் முக்கியமானது. ஏனென்றால் அனைத்து போட்டிகளிலும் நாட்டுக்காக விளையாடுகிறோம். இது அனைத்து வீரர்களுக்கும் கிடைத்திடாது என்று கூறியுள்ளார்.