பிசிசிஐ கோரிக்கை.. ஏற்குமா ஐசிசி?.. புரிய வைப்பாரா கங்குலி? - இன்று முக்கிய முடிவு
மும்பை: ஐசிசி இன்று (ஜூன்.1) நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் கோலியின் டெஸ்ட் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி தலா ஒரு போட்டி தோல்வி அடைந்திருக்கும் நிலையில், இங்கிலாந்து டூர் அவருக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு கூட்டம்
இந்த சூழலில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்த பிறகு, செப்டம்பரில் ஐபிஎல் தொடரை பிசிசிஐ தொடங்குகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, கடந்த மே 29 அன்று மும்பையில் நடந்த "SGM" மீட்டிங்கிற்கு பிறகு அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 சீசனின் மீதமுள்ள போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடிக்க உள்ளது. பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டத்தில் (எஸ்ஜிஎம்) இந்த முடிவு எடுக்கப்பட்டது. உறுப்பினர்கள் ஐபிஎல் மீண்டும் தொடங்க ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். மேலும், டி20 உலகக் கோப்பை 2021 நடத்துவதற்கு ஏதுவான நேரம் குறித்து முடிவெடுக்க கூடுதல் கால அவகாசம் ஐசிசியிடம் கேட்கப்பட உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

புரிய வைப்பாரா கங்குலி?
இந்த நிலையில், ஐசிசி இன்று (ஜூன்.1) நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கலந்து கொள்கிறார். அப்போது, அவர் பிசிசிஐ சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஐசிசி-யிடம் அவர் முன்வைக்கிறார். மேலும், உலகக் கோப்பை டி20 நடத்துவது குறித்து முடிவு செய்ய அவர் கால அவகாசம் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை, ஐசிசி ஏற்றுக்கொள்ளும் என்றே தெரிகிறது. எனினும், இன்றைய ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகோ, அல்லது அதற்கு பிறகு உலகக் கோப்பை டி20 குறித்த அறிவிப்பு எதையும் ஐசிசி வெளியிட வாய்ப்பில்லை. அதற்கு பதில், ஜுலை 18ல் நடக்கும் வருடாந்திர கூட்டத்தில் உலகக் கோப்பை டி20 தொடர் குறித்து ஐசிசி தனது இறுதி முடிவை அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று இடங்கள்
அதேசமயம், பிசிசிஐ இந்திய அரசாங்கத்திடம், உலகக் கோப்பைத் தொடரை இந்தியாவில் நடத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து பேச்சு நடத்த உள்ளதாக தெரிகிறது. அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பிசிசிஐ மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை, அக்டோபர் மூன்றாவது வாரத்திலோ அல்லது நவம்பர் 2வது வாரத்திலோ உலகக் கோப்பை நடத்தும் சூழல் ஏற்பட்டால் மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய மூன்று இடங்களில் தான் தொடர் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போதே ஆலோசனை
மேலும், ஐசிசி ஆலோசனை கூட்டத்தில், 2023 லிருந்து 2031 வரையிலான எட்டு வருடங்களுக்கான கிரிக்கெட் தொடர்கள் குறித்த ஆலோசனையும் நடைபெற உள்ளது. குறிப்பாக, கொரோனா அலை மாறி மாறி ஒவ்வொரு நாடுகளையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்க, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இனியும் அடுத்தடுத்து தொடர்ந்து நடத்த வாய்ப்புகள் உள்ளதா என்றும் ஆலோசிக்கப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications