எனக்கே விபூதி அடிக்க பார்த்தல.. எதிர்ப்பு தெரிவித்த இந்தியா.. அடிப்பணிந்த ஐசிசி ! நடந்தது என்ன?
மும்பை : கிரிக்கெட் உலகில் பணக்கார நாடாக இந்தியா விளங்குகிறது. ஆனால் அப்படி இருக்கும் போது ஐசிசி சில சமயம் பிசிசிஐக்கு விபூதி அடிக்க பார்க்கிறது.
சமீபத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் மிகப்பெரிய விமர்சனங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது.
குறிப்பாக இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு நாட்களில் 31 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதில் சுழற் பந்துவீச்சாளர்கள் மட்டும் 26 விக்கெட் எடுத்தனர்.

ஐசிசி நடவடிக்கை
மூன்றாவது நாள் தொடக்கத்திலே ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கான நடுவர் கிறிஸ் பிராட் அளித்த அறிக்கையில் ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருந்ததால் பேட்டிற்கும் பந்திற்கும் சரிசமமான நிலை இல்லாமல் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டது என்று தெரிவித்து இருந்தார்.

இந்தியா கண்டனம்
இதனால் இந்தூர் ஆடுகளத்திற்கு மோசம் என தரச் சான்றிதழை வழங்கிய ஐசிசி மைனஸ் 3 புள்ளிகளை கொடுத்திருந்தது. இதற்கு கவாஸ்கர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மோதிய டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேனில் 2 நாட்களில் முடிந்தது .அதற்கு ஐசிசி சராசரிக்கு கீழ் என தரச் சான்றிதழ் கொடுத்தது.

ஆபத்து
ஆனால் இந்தூர்க்கு மட்டும் ஏன் இப்படி ஒரு தலைப்பட்சமாக ஐசிசி நடந்து கொள்கிறது என அவர் கேள்வி எழுப்பினார். மேலும் இந்தூர் மைதானம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஐசிசி யின் இந்த தரச் சான்றிதழால் இந்தூரில் உலககோப்பை போட்டி நடைபெறாமல் போவதற்கு வாய்ப்பு இருந்தது.

ஐசிசி திடீர் பல்டி
இந்த நிலையில் ஐசிசி யின் இந்த நடவடிக்கைக்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது .மேலும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மேல்முறையீடு செய்தது. இதனை ஏற்றுக் கொண்ட ஐசிசி ஆடுகளத்திற்கு வழங்கிய தரச் சான்றிதழை மோசமிலிருந்து சராசரிக்கு கீழ் என மாற்றியுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications