புனே : உலகக்கோப்பை தொடருக்கு நடுவே தன் மும்பை வீட்டிற்கு சென்ற ரோஹித் சர்மா, அங்கிருந்து அடுத்த போட்டி நடக்க உள்ள புனேவிற்கு காரிலேயே அதி வேகத்தில் சென்று இருக்கிறார்.
அதுவும் அவரது கார் சாலை விதிகளை மீறி 215 கிமீ வேகத்தை தாண்டி பறந்துள்ளது. மூன்று இடத்தில் காவல்துறை வைத்திருந்த வேகத்தை அளக்கும் கருவியில் அவர் கார் பதிவாகி இருக்கிறது.

உலகக்கோப்பை தொடருக்கு நடுவே இப்படி 200 கிலோமீடர் வேகத்தில் காரில் பயணிக்க வேண்டுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்து புனேவில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த போட்டியில் வென்ற இந்திய அணி அடுத்ததாக புனேவுக்கு கிளம்பியது.
ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா மும்பையில் உள்ள தன் வீட்டிற்கு செல்ல விரும்பினார். அதனால், அவர் பவான் ஹான்ஸ் ஹெலிகாப்டர் மூலம் தனியாக மும்பைக்கு சென்றார். அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்த ரோஹித் சர்மா, அங்கிருந்து புனேவுக்கு காரில் செல்ல முடிவெடுத்தார்.
அவரிடம் உள்ள லம்போர்கினி எனும் சொகுசு காரில் மும்பையில் இருந்து புனேவுக்கு எக்ஸ்பிரஸ்வே எனும் சாலையில் செல்ல முடிவெடுத்தார். காரை அவரே ஓட்டிச் சென்றாரா? அல்லது ஓட்டுனர் வண்டியை ஓட்ட ரோஹித் காரில் பயணித்தாரா? என்பது தெரியவில்லை.

ஆனால், புனேவுக்கு செல்லும் வழியில் காவல்துறை வைத்திருந்த அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் கருவியில் ரோஹித் சர்மாவின் கார் மூன்று இடங்களில் சிக்கி இருக்கிறது. அந்த கண்காணிப்பு கருவியில் ஒரு கார் எண் பதிவானால் ஆன்லைன் மூலம் அந்த காருக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடும். ரோஹித் சர்மாவுக்கு இந்த ஒரே பயணத்தில் மூன்று அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
காவல்துறை யாருடைய வண்டி இப்படி மூன்று முறை விதியை மீறி இருக்கிறது என பார்த்த போது அது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் கார் என்பது தெரிய வந்தது. உலகக்கோப்பைக்கு நடுவே ரோஹித் சர்மா 215 கிலோ மீட்டர் வேகத்தில் காரில் சென்ற தகவலை அறிந்து காவல்துறை பதறிப் போய் இருக்கிறது.
பிசிசிஐ மற்றும் காவல்துறையின் திட்டப்படி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்கள் அணியின் பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். அவர்கள் உடன் காவல்துறை வாகனம் ஒன்று பாதுகாப்புக்கு வரும்.
இந்த நிலையில், இந்த அதிவேக பயணத்தில் ரோஹித் சர்மாவுக்கு ஏதாவது ஆகி இருந்தால் பிசிசிஐ, காவல்துறை என எல்லோருக்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கும். ரசிகர்கள் இந்த விஷயம் வெளியானதில் இருந்து ரோஹித் சர்மா இப்படி செய்திருக்கக் கூடாது என விமர்சனம் செய்து வருகின்றனர்.