புனே : இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் மனைவி வங்கதேச போட்டியின் போது பெரும் ஏமாற்றம் அடைந்து காணப்பட்டார். அதற்கு காரணம் ரோஹித் சர்மாதான்.
இந்தப் போட்டியில், ரோஹித் சர்மா அரைசதம் அடிக்க 2 ரன்களே தேவை என்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
ரோஹித் சர்மா முன்பு போல நிதான ஆட்டம் ஆடி அரைசதம் அடித்து, அதன் பின் அதிரடிக்கு மாறுவதில்லை. மாறாக முதல் சில ஓவர்களிலேயே சிக்ஸ், போர் என பறக்க விடுகிறார் ரோஹித் சர்மா.
அவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி போட்டியின் துவக்கம் முதலே முன்னிலை பெறுகிறது. ஆனால், இது தனிப்பட்ட முறையில் சதம், அரைசதம் அடிப்பதற்கு ரோஹித் சர்மாவுக்கு தடையாக உள்ளது. ஆனால், ரோஹித் இதைப் பற்றி எல்லாம் கவலையே இல்லாமல் அணிக்கு முன்னிலை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார்.

அதே போல, வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 257 ரன்களை சேஸிங் செய்த போது துவக்க வீரராக ஆடிய ரோஹித் சர்மா தொடர்ந்து பவுண்டரிகளை அடித்து வங்கதேச அணியை நிலைகுலைய வைத்தார். 39 பந்துகளில் எல்லாம் 48 ரன்களை எட்டினார்.
அடுத்து மீண்டும் ஒரு அரைசதம் அடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. வங்கதேச வீரர் தௌஹித் பவுண்டரி எல்லைக்கு மிக அருகே பந்தை கேட்ச் பிடித்தார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் ஏற்கனவே, ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்த ரோஹித் சர்மா, மீண்டும் அரைசதம் அடிப்பார் என ஆவலுடன் காத்திருந்த அவரது மனைவி ரித்திகா சஜ்தே பெரும் ஏமாற்றம் அடைந்தார். ரோஹித் சிக்ஸ் அடித்து விட்டார் என்றே அவர் முதலில் எண்ணினார். ஆனால் அது கேட்ச் ஆனதை ரித்திகா எதிர்பார்க்கவில்லை. அவர் முகம் சுருங்கியது. இந்த காட்சி தொலைக்காட்சியில் நேரலையில் காட்டப்பட்டது. பலரும் அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
ரோஹித் சர்மா ஆடும் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு பயன் அளித்தாலும், அவர் மனைவிக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆனாலும், ரோஹித் சர்மா தான் சுயநலமாக அரைசதம், சதம் அடிக்க வேண்டும் என நினைக்க மாட்டேன் என உறுதியாக கூறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.