இந்தியா 410 ரன்கள் குவிப்பு.. உலககோப்பையில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் ராகுல்.. ஸ்ரேயாசும் சதம்
பெங்களூரு : ஐசிசி உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி இன்று மகத்தான ஒரு சாதனையை படைத்திருக்கிறது. தீபாவளி அன்று ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டும் விதமாக நெதர்லாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இன்று பட்டையை கிளப்பினார்கள்.
இதன் மூலம் நெதர்லாந்துக்கு 411 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதை அடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் கில் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ரன்கள் சேர்க்க இதில் 51 ரன்களில் வெளியேறினார். அபாரமாக விளையாடிய ரோகித் சர்மாவும் 61 ரன்களில் பெவிலியின் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 51ரன்களில் வெளியேற நான்காவது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ், கே எல் ராகுல் ஜோடியும் இணைந்து பட்டையை கிளப்பினர்.
இருவரும் அதிரடியாக விளையாடி நெதர்லாந்து பந்து வீச்சை சிதற அடித்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடக்க ஒரு கட்டத்திற்கு மேல் யார் சதத்தை முதலில் அடிப்பது என இருவருக்குள் போட்டி ஏற்பட்டது. அதிரடியை கிளப்பிய ஸ்ரேயாஸ் 94 பந்துகளில் 128 ரன்கள் சேர்த்தார். இதில் 10 பவுண்டர்களும்,5 இமாலய சிக்சர்களும் அடங்கும். இதேபோன்று கே எல் ராகுல் ஆட்டத்தின் கடைசி ஓவரின் இரண்டு சிக்ஸர்களை தொடர்ந்து பறக்கவிட்டு 62 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கேஎல் ராகுல் பெற்றார்.
இதற்கு முன்பு 63 பந்துகளில் சதம் அடித்து ரோகித் சர்மா இந்த சாதனையை தக்க வைத்துக் கொண்டிருந்தார். எனினும் கே எல் ராகுல் 102 ரன்களில் வெளியேற கடைசி பந்தில் களமிறங்கிய சூரியகுமார் இரண்டு ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 410 ரன்கள் குவித்து நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. நடப்பு உலககோப்பை தொடரில் இந்தியா அடித்த அதிக ஸ்கோர் இதுவாகும். நெதர்லாந்து பந்துவீச்சு தரப்பில் லோகன் 10 ஓவர் வீசி அவர் மட்டுமே 108 ரன்கள் கொடுத்தார். இதைப் போன்று பால் வான் மீக்கர் 10 ஓவர்களில் 90 ரன்ளை கொடுத்து இருந்தார்.


Click it and Unblock the Notifications