அகமதாபாத் : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன 2023 உலகக்கோப்பை போட்டியில் சச்சின் வர்ணனையின் போது பேசிய பேச்சுக்களால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சச்சின் தவறாக எந்த விஷயத்தையும் பேசவில்லை. மாறாக, போட்டியில் நடக்கும் சம்பவங்களுக்கும், அவர் செய்த வர்ணனைகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது.

இந்தியாவில் கிரிக்கெட் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மீது இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய மரியாதை உள்ளது.
அதற்காகவே அவர் 2023 உலகக்கோப்பை தொடரின் உலகளாவிய தூதராக அறிவிக்கப்பட்டார். முக்கியமான இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது சச்சின் டெண்டுல்கர், வக்கார் யூனிஸ் என இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் இரண்டு ஜாம்பவான்களை வர்ணனை செய்ய வைத்தனர்.
அடடா.. இப்படி ஒரு காட்சியை கிரிக்கெட்டில் இனி எப்போது பார்ப்பது என ரசிகர்களும் ஆவலாக சச்சின் டெண்டுல்கர் - வக்கார் யூனிஸ் என்ன பேசப் போகிறார்கள் என ஆவலுடன் காத்திருந்தனர்.
பொதுவாக வர்ணனை செய்பவர்கள் போட்டியில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை சொல்ல வேண்டும். அதுதான் அவர்களின் முதல் கடமை. ஆனால், சச்சின் டெண்டுல்கர்
பல சமயம், போட்டியில் மிகப்பெரிய விக்கெட், பெரிய திருப்பம் ஏற்படும் போதெல்லாம் சம்பந்தமே இல்லாமல் பழைய கதைகளை பேசினார். அது வர்ணனையை கேட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கு அலுப்பாகவும், எரிச்சலாகவும் இருந்தது.
குறிப்பாக குல்தீப் யாதவ், பாபர் அசாமுக்கு வீசிய பந்தின் போது எல்பிடபுள்யூ கேட்கப்பட்டு பின் ரிவ்யூவும் செய்யப்பட்டது. ஆனால், ரீப்ளேவில் பந்து லெக் ஸ்டம்ப்பில் படுவது தெரிந்த போதும் அம்பயர் அவுட் தர மறுத்தார். இந்தப் போட்டியின் பரபரப்பான சம்பவம் அது தான். அப்போது சச்சின் தான் 30 ஆண்டுகளுக்கு முன் போட்டியின் போது சாப்பிட்ட உணவை குறித்து பேசிக் கொண்டு இருந்தார்.
இது போன்ற பல சம்பந்தமே இல்லாத பேச்சுக்களால் போட்டி வர்ணனையில் சொதப்பினார் சச்சின். உண்மையில், பிற முன்னாள் வீரர்கள் போல சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் வர்ணனையாளராக மாறவில்லை. இதுபோன்ற சில முக்கியமான தொடர்களின் போது மட்டுமே அவர் சிறிது நேரம் வர்ணனை செய்வார்.
சச்சினுக்கு வர்ணனை செய்வதில் அனுபவம் இல்லாததே இந்த மோசமான சம்பவம் நடக்க காரணம். அவரை சில ஓவர்களுக்கு மட்டும் வர்ணனை செய்ய வைத்து விட்டு மற்றவர்களை வர்ணனை செய்ய வைத்திருக்கலாம். இனியாவது ஐசிசி, பிசிசிஐ போன்ற அமைப்புகள் இதை பரிசீலிக்க வேண்டும்.