துபாய் : ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது.
ஐசிசி தளத்தில் வெளியாகி உள்ள இந்தப் பட்டியலில் 2018ஆம் ஆண்டுக்கு பிறகு பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.
2023 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி வரும் நிலையில், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். அவர் 863 புள்ளிகள் பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்த இரண்டாம் இடத்தை சுப்மன் கில் பிடித்துள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்வில் முதன்முறையாக பேட்டிங் தரவரிசையில் இரண்டாம் இடத்தை அவர் பிடிப்பது குறிப்பிடத்தக்கது.
சுப்மன் கில் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 58 ரன்களும், அதற்கு முன்னதாக நேபாள அணிக்கு எதிராக ஒரு அரைசதமும் அடித்தது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா இதே தொடரின் மூன்று போட்டிகளில் மூன்று அரைசதங்கள் அடித்து, தரவரிசையில் ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளார்.
விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து, அதிக தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று எட்டாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் மூன்று பேட்ஸ்மேன்கள் பேட்டிங் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளனர்.
முன்னதாக செப்டம்பர் 2018ஆம் ஆண்டு ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் முதல் ஆறு இடங்களுக்குள் இடம் பெற்று சாதனை புரிந்தனர். தற்போது அவர்களில் தவான் அணியில் இடம் பெறாத நிலையில், அவருக்கு மாற்றாக துவக்க வீரராக அணியில் இடம் பெற்றுள்ள சுப்மன் கில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளார்.
மேலும், 759 புள்ளிகளை பெற்றுள்ள சுப்மன் கில், முதல் இடத்துக்கு முன்னேற இன்னும் 105 புள்ளிகளை பெற வேண்டும். பாபர் ஆசாம் வரும் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவிக்கும் பட்சத்தில் அந்த வித்தியாசம் இன்னும் அதிகரிக்கும்.
இதே தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் பாகிஸ்தான் அணியின் மூன்று வீரர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாபர் ஆசாம் முதல் இடத்திலும், இமாம் உல் ஹக் ஐந்தாம் இடத்திலும், பாக்கர் ஜமான் பத்தாம் இடத்திலும் உள்ளனர்.
தென் ஆபிரிக்காவின் ரஸ்ஸி வான் டேர் டஸ்ஸன் இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் நான்காம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த கே எல் ராகுல் 37ஆம் இடத்துக்கும், அரைசதம் அடித்த இஷான் கிஷன் 22ஆம் இடத்துக்கும் முன்னேறி உள்ளனர்.
ஆசிய கோப்பையில் 9 விக்கெட்களை வீழ்த்தி உள்ள குல்தீப் யாதவ் ஐந்து இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஏழாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். பும்ரா 27ஆம் இடத்திலும், ஹர்திக் பாண்டியா 56ஆம் இடத்திலும் உள்ளனர்.