ICC Rankings 2024 - விராட் கோலி முன்னேற்றம்..டெஸ்ட் தரவரிசையில் ரோகித் சர்மா சரிவு..அஸ்வின் முதலிடம்
மும்பை : தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டு இருக்கிறது.
இதில் முதல் 10 இடத்தில் விராட் கோலியை தவிர வேறு எந்த ஒரு இந்திய வீரர்களும் இல்லை. 864 புள்ளிகள் உடன் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 859 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டும், மூன்றாம் இடத்தில் 820 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் இருக்கிறார்.

சிஎஸ்கே புதிதாக வாங்கியுள்ள டாரல் மிட்செல் மூன்று இடங்கள் முன்னேறி தற்போது நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இதேபோன்று ஆஸ்திரேலிய உஸ்மான் கவாஜா ஒரு இடம் பின்தங்கி ஐந்தாவது இடத்திற்கும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் பின்தங்கி ஆறாவது இடத்திற்கும் வந்திருக்கிறார்கள்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 38 மற்றும் 76 ரன்கள் அடித்த விராட் கோலி நான்கு இடங்கள் முன்னேறி தற்போது ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறார். இதேபோன்று ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆன காரணத்தால் 4 இடங்கள் பின்தங்கி 10வது இடத்தில் இருந்து 14-வது இடத்திற்கு சரிந்து இருக்கிறார். பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 872 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா இந்தியாவுக்கு எதிராக ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் 854 புள்ளிகள் இரண்டாம் இடத்தில் உள்ளார். பாட் கம்மின்ஸ் 841 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், ஜடேஜா 774 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும்,பும்ரா 767 இடங்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 118 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், அதே புள்ளிகளை பெற்று ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் 115 புள்ளிகளை பெற்று இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.


Click it and Unblock the Notifications