ஐசிசி தரவரிசை.. 904 புள்ளிகள்.. அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா.. சரிந்த விராட் கோலி, ஜெய்ஸ்வால்!
மெல்போர்ன்: ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வினின் 904 ரேட்டிங் புள்ளிகளை சமன் செய்து நட்சத்திர வீரர் ஜஸ்பிரிட் பும்ரா சாதனை படைத்துள்ளார். அதேபோல் இந்திய அணியின் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், விராட் கோலி உள்ளிட்டோர் சரிவை சந்தித்துள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்தை தக்க வைத்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக இந்த சாதனையை படைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் ஜஸ்பிரிட் பும்ரா முதல்முறையாக 900க்கும் அதிகமான ரேட்டிங் புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி தரவரிசை ரேட்டிங் புள்ளிகளில் 900க்கும் அதிகமாக எடுத்த 2வது பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இதற்கு முன்பாக அஸ்வின் மட்டுமே 904 ரேட்டிங் புள்ளிகளை பெற்றிருக்கிறார்.
அஸ்வினின் அந்த சாதனையை ஜஸ்பிரிட் பும்ரா சமன் செய்துள்ளார். ஐசிசி தரவரிசையில் 904 ரேட்டிங் புள்ளிகளுடன் பும்ரா முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல் 3வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய ஜடேஜா, 4 இடங்கள் சரிந்து 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். நட்சத்திர வீரரான முகமது சிராஜ் ஒரு இடம் முன்னேறி 24வது இடத்தை பிடித்திருக்கிறார்.
பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் சரிந்து 5வது இடத்தில் இருக்கிறார். அதேபோல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 2 இடங்கள் சரிந்து 11வது இடத்திலும், சுப்மன் கில் 4 இடங்களில் சரிந்து 20வது இடத்திலும், விராட் கோலி ஒரு இடம் சரிந்து 21வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை பொறுத்தவரை 5 இடங்கள் சரிந்து 35வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஆனால் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் 10 இடங்கள் முன்னேற்றம் அடைந்து 40வது இடத்திலும், ஜடேஜா 9 இடங்கள் முன்னேற்றம் அடைந்து 42வது இடத்திலும் இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் பேட்ஸ்மேன்களை விமர்சித்தும், பும்ராவை கொண்டாடியும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications