பும்ரா தொடர்ந்து முதலிடம்! 161 ரன்கள் குவித்தும் 2வது இடத்தை இழந்த ஜெய்ஸ்வால்.. கோலிக்கும் சரிவு
மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி 161 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.
இந்த நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்ட் 10 நாட்கள் இடைவெளி இருந்தது. இன்று தருணத்தில் நியூசிலாந்தும், இங்கிலாந்தும் கிறிஸ்ட்சர்ச் நகரில் மோதியது. இதில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி 171 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஹாரி புரூக், இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இதன் காரணமாக இரண்டாவது இடத்தில் இருந்த ஜெய்ஸ்வால் தற்போது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஜோ ரூட், முதல் டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆனார்.இதன் மூலம் ரூட்டின் தரவரிசை புள்ளிகள் குறைந்து இருக்கிறது. இதனை அடுத்து முதல் இடத்தில் இருக்கும் ஜோ ரூட்டுக்கும் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹாரி புரூக்கிற்கும் வெறும் 41 புள்ளிகள் தான் வித்தியாசம் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ஹாரி புருக், வில்லியம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் என மூன்று வீரர்களுமே தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறார்கள். இதில் யார் அதிக ரன்கள் அடிக்கிறார்களோ அவர்கள் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஜோ ரூட் தன்னுடைய முதல் இடத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரன் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் மற்ற வீரர்களுக்கான பேட்டிங் வரிசை பட்டியலில் பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி ஒரு இடம் சரிந்து 14வது இடத்தில் இருக்கிறார். ரிஷப் பண்ட் தொடர்ந்து ஆறாவது இடத்தில் நீடிக்கும் நிலையில், ஆஸ்திரேலிய வீரஎ ஸ்மித் மட்டும் ஒரு இடம் சரிந்து எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமா 14 இடங்கள் முன்னேறி தற்போது பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத கில் ஒரு இடம் பின்தங்கி 18வது இடத்தை பிடித்திருக்கிறார். டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் பும்ரா 883 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், ரபாடா 865 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
2வது டெஸ்டில் காயம் காரணமாக விலகியுள்ள ஆஸ்திரேலிய வீரர்ஹேசல்வுட் 860 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், அஸ்வின் 807 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாட் கம்மிண்ஸ் 796 இடங்களுடன் ஐந்தாவது இடத்திலும், ஜடேஜா 794 புள்ளிகள் 6வது இடத்திலும் உள்ளனர். இலங்கைக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்து வீசிய மார்க்கோ யான்சென் 19 இடங்கள் முன்னேறி தற்போது ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications