ஐசிசி தரவரிசை பட்டியல்.. புதிய உச்சத்தை தொட்ட முகமது சிராஜ்.. ஜடேஜா, ராகுல் முன்னேற்றம்
மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்யாசத்தில் வெற்றியை பெற்றது. இதில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதன் மூலம் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.
இது குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

இதேபோன்று முஹமது சிராஜ் வெஸ்ட் இண்டீஸ் எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் மூன்று இடங்கள் முன்னேறி தற்போது 12-வது இடத்தை பிடித்து தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறார். இதுபோன்று அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஏழு இடங்கள் முன்னேறி 21 வது இடத்தை பிடித்திருக்கிறார்.
இதைப் போன்று பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜடேஜா சதம் அடித்திருப்பதன் மூலம் ஆறு இடங்கள் முன்னேறி தற்போது 25வது இடத்தை பிடித்திருக்கிறார். மற்றொரு தொடக்க வீரரான கே எல் ராகுல் அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் நான்கு இடங்கள் முன்னேறி தற்போது 35 வது இடத்தை பிடித்துள்ளார்.
இதேபோன்று ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நான்கு இடங்கள் முன்னேறி தற்போது 11 இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டன் மார்ஸ் 13 இடங்கள் முன்னேறி தற்போது பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கின்றார்.
நியூசிலாந்து வீரர் டீம் ராபின்சன் 58 இடங்கள் முன்னேறி தற்போது 22 ஆவது இடத்தை பிடித்திருக்கின்றார். வங்கதேச வீரர் சைஃப் ஹசன் 17 இடங்கள் முன்னேறி 18 வது இடத்தை பிடித்திருக்கின்றனர். இவர் ஆப்கானிஸ்தான் எதிராக மூன்றாவது t20 போட்டியில் அரைசதம் அடித்திருந்தார். இதேபோன்று டி20 பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் ரஷித் கான் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான மூன்று டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் மொத்தமாக ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதேபோன்று நூர் அகமத் 17வது இடத்திலும் முஜிபுர் ரஹ்மான் 23ஆம் இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசல்வுட் டி20 பவுலர்களுக்கான பட்டியலில் 13வது இடத்தை பிடித்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications