துபாய் : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியல் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் முகமது சிராஜ் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் முஹமது சிராஜ் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் இலங்கை அணி 50 ரன்களில் சுருண்டது.

இதனை அடுத்து ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள பந்துவீச்சாளர் களுக்கான தரவரிசை பட்டியலில் ஆறு மாதத்திற்கு பிறகு முகமது சிராஜ் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார். அவர் ஆசிய கோப்பை தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் 8 இடங்கள் முன்னேறி தற்போது முதல் இடத்தை பிடித்திருக்கிறார். ஜாஸ் ஹேசல்வுட், ட்ரெண்ட் பவுல்ட், ரஷீத் கான் ,மிச்செல் ஸ்டார்க் ஆகியோரை சிராஜ் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
இதேபோன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் முஜிபுர் ரஹ்மான், ரஷீத் கான் ஆகியோர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்கள். இன்னும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் சரிந்து தற்போது ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.
மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான பும்ரா இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது 27வது இடத்தை பிடித்துள்ளார். பேட்ஸ்மேனுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 174 ரன்கள் விளாசிய தென்னாப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசன் 20 இடங்கள் முன்னேறி தற்போது தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். இதை போன்று நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் தற்போது ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 13வது இடத்தை பிடித்துள்ளார்.
இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் ஓய்விலிருந்து திரும்பிய பென் ஸ்டோக்ஸ் தற்போது 36-வது இடத்தை பிடித்திருக்கிறார். அவர் நியூசிலாந்துக்கு எதிராக 182 ரன்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர் கில் தற்போது இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். மேலும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் 4 சுற்றில் சதம் விளாசினார். இதன் மூலம் அவர் ஒரு இடம் முன்னேறி எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். ரோகித் சர்மா பத்தாவது இடத்தில் நீடிக்கிறார். பேட்ஸ்மேன்கள் தர வரிசைகளில் முதல் 10 இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் உள்ளனர்.