ஐசிசி டி20 தரவரிசை.. ஸ்ரேயாஸ் ஐயர் கிடுகிடு உயர்வு.. முதல் 4 இடங்களில் 3 இந்தியர்கள்
மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஐசிசி வெளியிட்ட டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது 798 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 42 பந்துகளில் சதம் விளாசிய ஷ்ரேயாஸ், ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 18 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசையில் அவர் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் இஷான் கிஷன் 904 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அபிஷேக் சர்மா 891 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர். பாகிஸ்தான் டி20 கேப்டன் சாகிப்ஸாதா ஃபர்ஹான், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரைசதங்கள் மொத்தம் 238 ரன்கள் அடித்து 883 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
இந்திய வீரர்களான திலக் வர்மா 1 இடமும், சஞ்சு சாம்சன் 4 இடங்களும் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான ஷாய் ஹோப் 2 இடங்களும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 13 இடங்கள் ஆகியோரும் டி20 தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இலங்கை டி20 கேப்டன் குசல் மெண்டிஸ் 3 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானின் 21 வயது இளம் வீரர் மாஸ் சதாகத், இலங்கைக்கு எதிரான போட்டிகளில் 50 மற்றும் 96 ரன்கள் குவித்து, ஒரே அடியாக 187 இடங்கள் முன்னேறி 533 புள்ளிகளுடன் 45-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மேட் ரென்ஷா 147 இடங்கள் அதிரடியாக முன்னேறி 49-வது இடத்தைப் பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டர்பன் டெஸ்ட் போட்டியில் இவர் முதல் இன்னிங்ஸில் 190 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 82 ரன்களும் குவித்து, ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தார்.
அபுதாபியில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் செடிகுல்லா அடால் 41 இடங்கள் முன்னேறியுள்ளார். அதே போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய ரஹ்மத் ஷா 13 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications


