மும்பை : இந்திய டி20 கிரிக்கெட் அணியில் திலக் வர்மா கடந்த வாரம் தான் அறிமுகமானார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் தான் திலக் வர்மா இதுவரை விளையாடியிருக்கிறார்.
முதல் போட்டியில் 39 ரன்களும் இரண்டாவது போட்டியில் 51 ரன்களும், மூன்றாவது t20 போட்டியில் 49 ரன்களும் திலக் வர்மா குவித்திருக்கிறார். அச்சமின்றி பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொள்ளும் திலக் வர்மாவின் இயல்பு ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறது.

இதன் மூலம் அவரை உலகக் கோப்பை தொடரில் சேருங்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திலக் வருமா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி மூன்று போட்டியிலேயே புதிய சாதனை படைத்திருக்கிறார். அதன்படி சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் திலக் வர்மா 53 புள்ளிகள் உடன் தற்போது 46வது இடத்தில் இருக்கிறார். இதன் மூலம் கில், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா ஆகியோரை திலக் வர்மா முந்தியிருக்கிறார்.

மேலும் திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர்களில் தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அதிரடி வீரர் சூரியகுமார் தொடர்ந்து முதலிடத்தில் இருக்க விராட் கோலி 19வது இடத்தில் இருக்கிறார். அவர் நடப்பாண்டில் எந்த டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை. இதேபோன்று கே எல் ராகுலும், ரோகித் சர்மாவும் முறையே 33 மற்றும் 34 வது இடத்தில் இருக்கிறார்கள்.

அவர்களும் எந்த டி20 கிரிக்கெட்டிலும் நடப்பாண்டில் விளையாடவில்லை. இந்த நிலையில் கில் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் மோசமாக விளையாடி வருவதால் அவர் 11 இடங்கள் சரிந்து தற்போது 435 புள்ளிகள் உடன் 68வது இடத்தில் இருக்கிறார். இதேபோன்று ஹர்திக் பாண்டியா 53 வது இடத்திலும் இசான் கிஷன் 54வது இடத்திலும் இருக்கிறார்கள்.

டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பந்துவீச்சாளர்களில் இந்திய வீரர்கள் யாருமே முதல் 10 இடங்களில் இல்லை. ஆர்ஸ்தீப் சிங் அதிகபட்சமாக 17வது இடத்தில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சிறப்பாக செயல்படும் குல்தீப் யாதவ், இரண்டு போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் 24 இடங்கள் முன்னேறி தற்போது 51 வது இடத்தில் இருக்கிறார். இதேபோன்று அக்சர் பட்டேல் ஏழு இடங்கள் முன்னேறி 33வது இடத்திலும் ஹர்திக் பாண்டியா 37-வது இடத்திலும் இருக்கிறார்.