துபாய்: சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராத் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே நடைபெற்ற டி20 போட்டிகள் டி20 தரவரிசையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி டி20 பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 17-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் கேஎல் ராகுல் அடித்த அதிரடி சதம் அவரை தரவரிசையில் 31-வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. முன்னதாக அவர் 67-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, அப்போட்டியில் அதிரடி சதம் விளாசிய மேற்கிந்திய தீவுகள் வீரர் எவின் லெவிஸ் பேட்டிங் தரவரிசையில், 51-வது இடத்தைப் பிடித்துள்ளார். 288-வது இடத்தில் இருந்த அவர் தற்போது 51-வது இடத்திற்கு அதிரடியாக முன்னேறியுள்ளார்.
பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முன்னேற்றம் கண்டுள்ளார். 7-வது இடத்தில் இருந்த அஸ்வின் தற்போது 4-வது இடத்திற்கு முன்னேறி டாப்-5-ல் இடம்பிடித்துள்ளார். புவனேஷ்குமார் 67-வது இடத்திலும், முகமது சமி 82-வது இடத்திலும், அமித் மிஸ்ரா 104-வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே சமீபத்தில் டி20 தொடர் நடைபெறுவதற்கு முன்பாக 2-வது இடத்தில் இருந்த இந்திய அணியை விட 6 புள்ளிகள் பின்தங்கி இருந்த மேற்கிந்திய தீவுகள் அணி 3-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான டி20 தொடரை மேற்கிந்திய தீவுகள் 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதன்படி அந்த அணிக்கும் இந்திய அணிக்கும் ஒரு புள்ளி தான் வித்தியாசம் உள்ளது.
டி20 தரவரிசையில், நியூசிலாந்து அணி 132 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 126 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது. இதேபோல, இந்தியாவை விட ஒரே ஒரு புள்ளி பின்தங்கியுள்ள மேற்கிந்திய தீவுகள் 125-புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.