மும்பை : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் முன் எப்போதும் இல்லாத வகையில் 20 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வெல்லவில்லை. இதனால் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு இந்த டி20 உலக கோப்பை தான் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதனால் இந்த முறை டி20 உலக கோப்பையை இந்தியா வெல்லும் என்று தான் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியிருந்தது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் எந்த வீரர்கள் டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை தேர்வு குழு தயார் செய்து இருக்கிறது.
அந்த வீரர்களை ஐபிஎல் தொடரில் கண்காணித்து 15 பேர் கொண்ட அணியாக அதனை மாற்ற பிசிசிஐ திட்டம் திட்டி வருகிறது. இந்த உத்தேச அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் கே.எல் ராகுலும் இடம்பெற்று இருக்கிறார். ஆனால் அவர் இறுதி அணியில் இடம் பிடிப்பாரா என்பது ஐபிஎல் தொடருக்கு பின்பு தான் தெரியும்.
இதேபோன்று ஹர்திக் பாண்டியா, முஹமது சிராஜ் போன்ற வீரர்களும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். முகமது சமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருப்பதால் அவர் இந்த தொடரில் விளையாடுவது கேள்விக்குறிதான். இதேபோன்று ரிஷப் பந்தின் பெயரும் உத்தேச பட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் தன்னுடைய 100 சதவீதம் உடல் தகுதியை எட்டி விக்கெட் கீப்பிங் செய்ய முடியும் என்பதை நிரூபித்தால் மட்டுமே அவர் அணியில் தேர்வு செய்யப்படுவார். மேலும் தற்போது காயத்தில் இருக்கும் சூரிய குமார் யாதவ் இந்த உத்தேச பட்டியலில் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடும் ஜெய்ஸ்வால், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவும் இந்த பட்டியலில் உள்ளனர்.
இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வரும் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சர்துல் தாக்கூர்,சிவம் துபே, ரவி பிஸ்னாய், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வீரர்களின் செயல்பாடு மற்றும் உடல் தகுதியை பிசிசிஐ தீவிரமாக கண்காணிக்கும். இதேபோன்று உத்தேச பட்டியலில் உள்ள அனைத்து வீரர்களுக்குமே 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.