மும்பை : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வரும் ஜூன் ஒன்றாம் தேதி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. 20 அணிகள் பங்கு பெறும் இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணி இளம் வீரர்களை பெருமளவில் பயன்படுத்தியது. அதேபோல் ஒரு திட்டத்தை கையில் எடுக்க தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் முடிவு எடுத்திருந்தார்.

அதன்படி விராட் கோலி, ஜடேஜா ரோகித் சர்மா போன்ற வீரர்கள் வேண்டாம் என்று அவர் முடிவு எடுத்திருந்தார். ஆனால் டி20 உலக கோப்பையின் கேப்டனாக ரோகித் சர்மா தான் இருக்க வேண்டும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால் அதற்கு ஓகே சொன்ன அகார்கர், விராட் கோலியையும், ஜடேஜாவையும் அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என முடிவெடுத்திருந்தார்.
ஸ்ட்ரைக் ரேட் போதிய அளவில் இல்லை என்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருந்தார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளத்தில் பந்து பேட்டிற்கு வராது. இதனால் விராட் கோலி ரன்குவிக்க தடுமாறுவார் என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியானது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் திடீரென்று ஜெய்ஷா கலந்து கொண்டு சுமார் 2 மணி நேரம் அகார்கருடன் சேர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு ஜெய்ஷா வெளியேறினார். அதன் பிறகு தான் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஸ்ட்ரைக் ரேட் போன்ற விஷயங்களை காரணம் காட்டி விராட் கோலி, ஜடேஜா, கே எல் ராகுல் ஆகியோரை அணியிலிருந்து நீக்க முடிவெடுத்தார். ஆனால் ஜெய்ஷா தன்னுடைய வீட்டோ பவரை பயன்படுத்தி விராட் கோலியையும் ஜடேஜாவையும் கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கே.எல் ராகுலை வேண்டுமானால் அணியில் இருந்து நீக்கி விடுங்கள் என்றும் கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டி20 உலக கோப்பை அமெரிக்காவில் நடைபெறுவதை சுட்டிக்காட்டி உள்ள ஜெய்ஷா, விராட் கோலி போன்ற ஸ்டார் வீரர்கள் இருந்தால்தான் இந்த தொடர் வெற்றிபெறும் என்றும் மேலும் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் நன்றாகவே விளையாடி வருவதாகவும் சுட்டிக்காட்டி அவரை அணியில் சேர்க்கும்படி கூறியதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் இந்திய அணியை தேர்வு செய்ய காலதாமதம் ஆனதாகவும் கூறப்படுகிறது.