மும்பை : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது, இதில் கேப்டன் ரோகித், பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர் போன்றோர் இணைந்து 15 பர் கொண்ட அணியை தேர்வு செய்து இருக்கிறார்கள். இதில், விராட் கோலி தேவையா?. 4 சுழற்பந்துவீச்சாளர் அதிகம் இல்லையா என பல விமர்சனங்கள் வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் நிறைய வீரர்கள் சேர்க்கப்படவில்லை என ரோகித் சர்மா மீது ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். அவரின் சொந்த பேட்டிங் மீதே விமர்சனங்கள் குவிந்தது.

200+ ரன்கள் சாதாரணமாக வந்துக்கொண்டிருக்கும் சூழலில் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விராட் கோலியின் ஆட்டம் செல்லுபடி ஆகுமா? என்பது தான் முதல் கேள்வியாக இருந்தது.
பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் கோலி கண்டிப்பாக அணிக்கு தேவையா? என்பது போல் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் ரோகித் ஒரு சிரிப்புடன் முடித்துக்கொண்டார். ஆனால் அந்த சிரிப்புக்கு அர்த்தம் இப்போது தெரியவந்துள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த அடுத்த போட்டியிலேயே குஜராத் அணிக்கு எதிராக, தனது ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை கோலி காட்டினார். எப்போதுமே நிதானமாக தொடங்கும் கோலி முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆச்சரியம் தந்தார். இதுமட்டுமல்லாமல் டி20 வரலாற்றிலேயே விராட் கோலி பவர் ப்ளேவில் முதல் முறையாக 4 சிக்ஸர்களை விளாசினார். ஓப்பனராக தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டிவிட்டார்.
இதற்கு அடுத்து சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் ஃபார்ம் தான். இருவருமே நடப்பு ஐபிஎல் தொடரில் பெரியளவில் சோபிக்காமல் இருந்தனர். குறிப்பாக சூர்யகுமார் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஐதராபாத் அணிக்கு எதிராக 51 பந்துகளில் 102 ரன்களை விளாசியுள்ளார். அதுவும் 31 /3 என அணி தடுமாறிய போது செய்தது தான் இங்கு குறிப்பிட வேண்டியது. மறுபுறம் ஹர்திக் பாண்ட்யாவோ கடைசி 3 போட்டிகளில் 7 விக்கெட்களை எடுத்து தனது பவுலிங் திறமையை நிரூபித்துள்ளார். விரைவில் அவரின் பேட்டிங் திறனும் வெளிப்படும் என தெரிகிறது.
இவை எல்லாத்தையும் விட பெரிய சர்ச்சையானது 4 ஸ்பின்னர்கள் எதற்கு தேவை என்பது தான். ஆனால் ரோகித் தேர்வு செய்த அந்த 4 ஸ்பின்னர்கள் தான் ஐபிஎல்-ன் போக்கையே மாற்றி வருகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? குல்தீப் யாதவ் வெறும் 8 போட்டிகளில் 12 விக்கெட்களை எடுத்துள்ளார். மறுபுறம் யுவேந்திர சாஹல் 10 போட்டிகளில் 13 ரன்களை குவித்திருக்கிறார். ஆல்ரவுண்டர்களாக பார்க்கப்படும் அக்ஷர் பட்டேல், ஜடேஜா ஆகியோரும் பேட்டிங் & பவுலிங் என இரண்டிலுமே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். வீரர்களின் செயல்பாட்டை நன்கு அறிந்து வைத்துள்ள ரோகித் சர்மா, அதே திட்டத்தை சரியாக பயன்படுத்தி உலகக்கோப்பையை வென்று கொடுப்பாரா??? பொறுத்திருந்து பார்ப்போம்.