ஐசிசி டெஸ்ட் தரவரிசை - ரோஹித் சர்மாவை அடித்து தூக்கிய இளம் இந்திய வீரர்.. கோலிக்கு அடுத்த இடம்
மும்பை : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் அதிரடியாக 12வது இடத்தை பிடித்துள்ளார் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் ரோஹித் சர்மாவை முந்தி இருக்கும் ஜெய்ஸ்வால், விராட் கோலிக்கு அருகே வந்துள்ளார். தற்போது பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 744 புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். ஜெய்ஸ்வால் 727 புள்ளிகளுடன் 12வது இடத்தில் இருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் அடிக்கும் பட்சத்தில் விராட் கோலியை முந்தி முதல் பத்து இடங்களுக்குள் முதன்முறையாக இடம் பெற வாய்ப்பு உள்ளது. ரோஹித் சர்மா 720 புள்ளிகளுடன் 13வது இடத்தில் இருக்கிறார். ரிஷப் பண்ட் நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டிகளில் ஆடாவிட்டாலும் 699 புள்ளிகளுடன் 14வது இடத்தில் இருக்கிறார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித், மூன்றாம் இடத்தில் ஜோ ரூட் உள்ளனர்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 867 புள்ளிகள் பெற்று இருக்கிறார். இரண்டாவது இடத்தில் அஸ்வின் 846 புள்ளிகளுடன் இடம் பெற்றுள்ளார். ரவீந்திர ஜடேஜா 785 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.
டெஸ்ட் ஆல் - ரவுண்டர்கள் பட்டியலிலும் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். முதல் ஐந்து இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். ரவீந்திர ஜடேஜா 449 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 323 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அக்சர் பட்டேல் 275 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
அணிகளுக்கான தரவரிசையில் 117 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணியும் 117 புள்ளிகள் பெற்று இருந்தாலும் தசம (decimal) வித்தியாசத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications