ஐசிசி டெஸ்ட் தரவரிசை- விராட் கோலி, ரோகித் சர்மா சரிவு.. சதத்தால் ரிஷப் பண்ட் கிடுகிடு உயர்வு
மும்பை : ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சரிவை சந்தித்து இருக்கிறார்கள். இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியும், இலங்கை நியூசிலாந்துக்கு இடையிலான மற்றொரு டெஸ்ட் போட்டியும் முடிவடைந்த நிலையில் தற்போது தரவரிசை பட்டியல் பல மாற்றங்களை சந்தித்து இருக்கிறது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு திரும்பிய ரிஷப் பண்ட், வங்கதேசத்துக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். இதன் மூலம் ரிஷப் பன்ட் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதல் டாப் 10 இடத்திற்கு நுழைந்து தற்போது ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

இதேபோன்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அரை சதம் அடித்த ஜெய்ஸ்வால் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா வங்கதேசத்துக்கு எதிராக சொதப்பியதால் ஐந்து இடங்கள் பின் தங்கி தற்போது 716 புள்ளிகளுடன் 10வது இடத்தை பெற்றிருக்கிறார்.
இதேபோன்று விராட் கோலிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பியதால் அவர் ஐந்து இடங்கள் சரிந்து டாப் 10 இடத்தை விட்டு வெளியேறி இருக்கிறார். தற்போது விராட் கோலி பன்னிரண்டாவது இடத்தில் உள்ளார். இதேபோன்று வங்கதேசத்துக்கு எதிராக முதல் டெஸ்டில் சதம் அடித்த சுப்மன் கில், ஐந்து இடங்கள் முன்னேறி தற்போது 14 வது இடத்தை பிடித்திருக்கிறார்.
இதேபோன்று இலங்கை அணியின் திறமை வாய்ந்த இளம்வீரர் கமிண்டு மெண்டிஸ் மூன்று இடங்கள் முன்னேறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். பேட்டிங் வரிசையில் ஜோ ரூட் முதலிடத்தில் தொடர்ந்து இருக்கிறார். வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும், டாரல் மிச்செல் மூன்றாவது இடத்திலும் ஸ்மித் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
இதேபோன்று வங்கதேசத்துக்கு எதிராக சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஏழு இடங்கள் முன்னேறி தற்போது 72 வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோன்று பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். இதைப் போன்று இந்திய அணியின் ஸ்டார் வீரரான பும்ரா இரண்டாவது இடத்திலும், ஆஸி வீரர் ஹேசல்வுட் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
ஜடேஜா ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்தில் இருக்கிறார். இதுபோன்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத் ஜெயசூர்யா ஐந்து இடங்கள் முன்னேறி தற்போது எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் இரண்டாவது இடத்திலும் ஷகிபுல் ஹசன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications