துபாய்: 2024 ஆம் ஆண்டிற்கான 11 சிறந்த வீரர்கள் அடங்கிய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டு இருக்கும் இந்த அணியில் மூன்று இந்திய வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், நான்கு இங்கிலாந்து வீரர்கள், இரண்டு நியூசிலாந்து வீரர்கள், ஒரு இலங்கை வீரர் மற்றும் ஒரு ஆஸ்திரேலிய வீரருக்கு இந்த அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய மூன்று இந்திய வீரர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் பிளேயிங் லெவனில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஜெய்ஸ்வால் 2024 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 1478 ரன்கள் சேர்த்து இருந்தார். அந்த ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்த வீரர்களில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி 54.74 என்பதாக இருந்தது. ரவீந்திர ஜடேஜா 2024 ஆம் ஆண்டில் 48 விக்கெட்களையும், 527 ரன்களையும் சேர்த்து ஆல் - ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அதனால் அவருக்கும் இந்த அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
2024 ஆம் ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக இருந்தார். பும்ரா. அவர் மொத்தம் 71 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். மேலும், அவரது பவுலிங் சராசரி 14.92 என்பதாக இருந்தது. அதனால் அவருக்கும் இந்த அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சிறந்த டெஸ்ட் வீரர்கள் அணியில் நான்கு இங்கிலாந்து வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. துவக்க வீரர் பென் டக்கெட், சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களாக அறியப்படும் ஜோ ரூட் மற்றும் இளம் வீரர் ஹாரி ப்ரூக் ஆகியோருடன் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
நியூசிலாந்து அணியை சேர்ந்த சிறந்த பேட்ஸ்மனான கேன் வில்லியம்சன் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றிக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் நம்ப முடியாத வகையில் ரன் குவித்த இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ்க்கு மிடில் ஆர்டரில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது. அவரது சராசரி கடந்த ஆண்டு 94 என்பதாக இருந்தது.
இந்த சிறந்த டெஸ்ட் வீரர்கள் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் கடந்த ஆண்டு 37 விக்கெட்களையும், 306 ரன்களையும் சேர்த்து இருந்தார்.
2024 ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி வீரர்கள் பட்டியல் -
யாஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், கமிந்து மென்டிஸ், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மாட் ஹென்றி, ஜஸ்ப்ரீத் பும்ரா