மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கோப்பையை வெல்வது எவ்வளவு கடினம் என்று 80 மற்றும் 90 கிட்ஸ்ளுக்கு நன்றாகவே தெரியும். அந்த காலத்தில் இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு சென்றாலே போதும் என்ற மனநிலையில் தான் ரசிகர்கள் இருந்தார்கள்.
அதை கங்குலி படை ஓரளவுக்கு மாற்றி 2002 சாம்பியன்ஸ் கோப்பை 2003 ஐசிசி உலக கோப்பை இறுதிப்போட்டி வரை சென்று தோல்வி என ஒரு அளவு முன்னேற்றத்தை இந்தியா கண்டது. ஆனால் இந்திய அணியால் ஐசிசி கோப்பையை வென்று சாதிக்க முடியும் என்பதை மாற்றினார் மகேந்திர சிங் தோனி.

இந்திய கிரிக்கெட் என்றாலே மும்பை டெல்லி கொல்கத்தா ஆகிய நகரங்கள் தான் என இருந்த காலத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து இந்திய அணியின் தலையெழுத்தையே மாற்றி விட்டார் தோனி. 2007 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியைத் தழுவிய நிலையில் அதே ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசிகர்கள் இருந்தனர்.
ஆனால் தோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதேபோன்று 2009 ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியது. என்னும் 2014 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இறுதி போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோல்வியை தழுவியது.
ஐசிசி தொடரில் இறுதிப்போட்டியில் தோனி கேப்டனாக இருந்தபோது நான்கு ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் தோனியை தவிர மற்ற இந்திய அணி கேப்டன்கள் ஏழு இறுதிப் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். அதில் கபில்தேவ் மட்டும்தான் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். மற்ற ஆறு ஆட்டங்களிலும் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது. விராட் கோலி ரோகித் சர்மா என கேப்டன்கல் ஒரு ஐசிசி தொடரில் இறுதிப்போட்டியில் கூட வென்றதில்லை.