IND vs AUS: உலகக்கோப்பை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. புதிய சாதனையை செய்த இந்திய மகளிர் அணி
மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இருந்தது. மேலும், பல அஆண்டு கால கிரிக்கெட் சாதனைகளைத் தகர்த்தெறிந்து ஒரு புதிய சரித்திரத்தை எழுதியுள்ளது. ஜெமிமா ரோட்ரிக்ஸின் அபார சதம் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் பொறுப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. இந்த மாபெரும் வெற்றியின் போது முறியடிக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட உலக சாதனைகளின் பட்டியல் இதோ:
1. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சேஸிங்:
இந்திய அணி 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக எட்டியதன் மூலம், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய வெற்றிகரமான சேஸிங் (Highest Successful Chase) ஆகும்.
சுவாரஸ்யமாக, இதற்கு முந்தைய சாதனையை (331 ரன்கள்) இதே உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றில், இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவே படைத்திருந்தது. தற்போது, அதே அணிக்கு எதிராக அந்தச் சாதனையை முறியடித்து இந்தியா பழிதீர்த்துள்ளது.

2. உலகக் கோப்பை நாக்-அவுட்டில் முதல் 300+ சேஸிங்:
ஆண்கள் அல்லது பெண்கள் என எந்த ஒருநாள் உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியிலும், 300 ரன்களுக்கு மேல் ஒரு அணி வெற்றிகரமாக சேஸ் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
அரையிறுதி போன்ற ஒரு மாபெரும் அழுத்தமான போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தியது, இந்திய அணியின் மன உறுதியைப் பறைசாற்றுகிறது.
3. ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்கள் (Highest Match Aggregate):
இந்தப் போட்டியில், இரு அணிகளும் சேர்ந்து குவித்த 679 ரன்கள் (ஆஸ்திரேலியா 338 + இந்தியா 341), மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.
இதற்கு முன்பு, 2017 உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் அடிக்கப்பட்ட 678 ரன்களே சாதனையாக இருந்தது.
4. இளம் வீராங்கனையின் சாதனை சதம்:
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட், மகளிர் உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் சதம் அடித்த இளம் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இருப்பினும், அவரது இந்த சாதனை சதம் அணியின் வெற்றிக்கு உதவவில்லை.
இந்தத் தோல்வியின் மூலம், 2017 முதல் உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் 15 போட்டிகள் கொண்ட தொடர் வெற்றிப் பயணத்திற்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 2017 அரையிறுதியிலும் இந்தியாதான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.
ஆட்டத்தின் திருப்புமுனையாக, ஜெமிமா 82 மற்றும் 106 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தவறவிட்டனர். இது போட்டி இந்தியாவின் பக்கம் திரும்ப முக்கிய காரணமாக அமைந்தது.
இறுதிப் போட்டியில் இந்தியா:
இந்த வெற்றியின் மூலம், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதன் மூலம், இந்த முறை மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு ஒரு புதிய சாம்பியன் கிடைப்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications