சிட்னி: 2025 மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணியிடம் அடைந்த அதிர்ச்சித் தோல்வி, தன்னை இன்னும் ஒரு 'பேய் போல துரத்துவதாகவும்', அந்த வலி அவ்வளவு எளிதில் நீங்காது என்றும் ஆஸ்திரேலிய கேப்டன் அலீசா ஹீலி வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், அந்தத் தோல்வியின் தாக்கத்தால், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியைத் தான் பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை அரையிறுதியில், உலகக் கோப்பை நாக்-அவுட் வரலாற்றிலேயே (ஆண்கள் அல்லது பெண்கள்) அதிகபட்ச ஸ்கோரான 339 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தோல்வி குறித்து 'வில்லோ டாக் கிரிக்கெட்' என்ற நிகழ்ச்சியில் பேசிய ஹீலி, தனது ஏமாற்றத்தைப் பகிர்ந்துகொண்டார்.

"நான் நன்றாக இருக்கிறேன் என்று பொய் சொல்ல மாட்டேன். அந்தத் தோல்வி இன்னும் வலிக்கிறது. ஏழு வாரங்கள் நீடித்த ஒரு நீண்ட சுற்றுப்பயணத்தில் நாங்கள் மிகச் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினோம், ஆனால் இந்திய தடையைத் தாண்ட முடியவில்லை. அந்த வகையில் இது ஏமாற்றமளிக்கிறது. ஆனாலும், இந்த அணி அடுத்த கட்டத்தில் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்," என்று ஹீலி கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடுகிறோம், மற்ற அணிகள் எங்களைத் தோற்கடிக்க தங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. நான் இறுதிப் போட்டியைப் பார்க்கவில்லை என்றாலும், இந்தியா கோப்பையை வென்றது உலக கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு நல்லது. அந்த வகையில் இது ஒரு அற்புதமான அனுபவம். ஆனால் தனிப்பட்ட முறையில், இந்தத் தோல்வி என்னைச் சிறிது காலத்திற்குத் துரத்தும்" என்றார்.
அரையிறுதிப் போட்டியில் ஃபோப் லிட்ச்ஃபீல்டின் சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் குவித்தது. இருப்பினும், இந்த ஸ்கோர் போதாது என்று தான் அப்போதே உணர்ந்ததாக ஹீலி குறிப்பிட்டார். இந்தியாவின் சேஸிங்கின் போது, ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம் அடிப்பதற்கு முன்னரும், பின்னரும் கொடுத்த இரண்டு முக்கியமான கேட்சுகளை ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தவறவிட்டது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
போட்டியின் தொடக்கத்தில் தான் ஆட்டமிழந்த விதம் குறித்தும், அப்போது நிலவிய குழப்பமான சூழல் குறித்தும் ஹீலி விரிவாக நினைவுகூர்ந்தார். "சில நேரங்களில் நமக்கு கெட்டது வரும் முன் அது பற்றிய எண்ணம் ஏற்படுமல்லவா? அதுபோலத்தான் இருந்தது. 'இன்னும் சிறிது நேரம் காத்திருக்கலாம், மழைக்காக ஆட்டம் நிச்சயம் நிற்கும்' என்று என் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால், ஏற்கனவே மூன்று நிமிடங்கள் காத்திருந்தேன்."
"அந்த இடைவேளையில் மின்விளக்குகள் எரிய வைக்கப்பட்டிருக்க வேண்டும். நான் நடுவரிடம், 'பந்துவீசும்போது விளக்குகள் எரியுமா? அதற்காகக் காத்திருக்கலாமா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'ஓவர் முடிந்த பிறகுதான் விளக்குகள் எரியும் என்று கூறியுள்ளனர்' என்றார். நான் பேட்டிங் செய்யத் தயாராகி, பந்துவீச்சாளர் ஓடிவரத் தொடங்கியதும், விளக்குகள் எரிந்தன. அதுவும் ஒரு விளக்கு மட்டும் எரிந்தது. அதனால் அனைத்து விளக்குகளும் எரியும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது" என்றார் ஹீலி.
"மறுமுனையில், சைட்ஸ்கிரீனுக்கு முன்னால் மக்கள் நடந்துகொண்டிருந்தனர். மைதானம் முழுவதும் ஒரே குழப்பமாக இருந்தது. இந்தியாவில் சில நேரங்களில் இப்படி நடப்பதுண்டு. மைதானத்தைச் சுற்றி வெவ்வேறு வேலைகளில் பலர் இருப்பார்கள். அது மிகவும் எரிச்சலூட்டியது. நான் இன்னும் ஒரு நிமிடம் காத்திருந்திருந்தால், நாங்கள் மைதானத்தை விட்டு வெளியேறியிருப்போம். பின்னர் மீண்டும் வந்து ஆட்டத்தைத் தொடர்ந்திருக்கலாம்" என்று தனது ஆட்டமிழப்புக்கு முந்தைய சூழலை அவர் விளக்கினார்.
போட்டியின்போது மைதானத்தின் தன்மை மாறியது குறித்தும் ஹீலி விளக்கினார். "டி.ஒய். பாட்டீல் மைதானத்தின் செம்மண் ஆடுகளம், பனிப்பொழிவால் அதிகம் பாதிக்கப்படாது. போட்டியின் தொடக்கத்தில் ஆடுகளம் சற்று மெதுவாக இருந்தது. ஆனால், மின் விளக்குகளின் வெளிச்சத்தில், பந்து பேட்டிற்கு நன்றாக வந்தது. லேசான மழையும் பெய்ததால், பந்து மேலும் வேகமாக வந்தது. நாங்கள் பந்துவீச்சில் வேகத்தை மாற்றி வீசுவதில் சற்று தாமதித்துவிட்டோம். முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த நாங்கள் உருவாக்கிய வாய்ப்புகளை எங்களால் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை" என்று ஹீலி கூறினார்.